சிறப்பு மருத்துவ முகாம் மாணவியர் பயனடைய யு.ஜி.சி., அறிவுறுத்தல்
சிறப்பு மருத்துவ முகாம் மாணவியர் பயனடைய யு.ஜி.சி., அறிவுறுத்தல்
ADDED : செப் 19, 2025 01:48 AM
சென்னை:'மத்திய அரசு சார்பில், நாடு முழுதும் அக்டோபர் 2ம் தேதி வரை நடத்தப்படும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை, கல்லுாரி மாணவியரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளையொட்டி, நாடு முழுதும், 'ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியான்' என்ற தலைப்பில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், மத்திய அரசு சார்பில் அக்டோபர் 2 வரை நடத்தப்பட உள்ளது.
இம்முகாம்களில், பெண்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு, மார்பக புற்று நோய் உட்பட பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், மாதவிடாய் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. ரத்த தான முகாம்கள் நடத்தி, 1 லட்சம் யூனிட் ரத்தம் சேகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
எனவே, உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவியரும், இந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் பங்கேற்று பயனடைய யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.

