
புதுதில்லி : கார்த்திகை மண்டல பூஜை கலாச்சார நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, துவாரகா ஸ்ரீராம் மந்திரில், மயூர் விஹார் ஃபேஸ் மூன்றை சார்ந்த வானம்பாடி குழுவினரின் கோலாட்டம் நடனம் நடைபெற்றது. பார்வையாளர்களை இது மிகவும் கவர்ந்தது. ருக்மணி, சுகந்தி பாலா, உமா வெங்கடேஷ், அனுஷா கண்ணன், சுபத்ரா ரமேஷ், பபிதா கங்காதரன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
ஸ்ரீராம் மந்திர் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அறங்காவலர்கள் ராம்குமார் மற்றும வி. கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்ற கலைஞர்களை பாராட்டி கெளரவித்தனர்.
கோலாட்டம்
கோலாட்டம் நடனம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் நடத்தப்படும் ஒரு பழமையான கிராமப்புற நாட்டுப்புற கலை ஆகும். இது கொலன்னாலு அல்லது கொல்கொலன்னாலு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நடன வடிவம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பிரபலமானது. கோலாட்டம் பெண்களால் மட்டுமே நடத்தப்படுகிறது. இந்த நாட்டுப்புற நடனம் தாள அசைவுகள், பாடல்கள் மற்றும் இசை ஆகியவற்றின் கலவையாகும்.
இந்த நடன வடிவம் உள்ளூர் கிராம திருவிழாக்களின் போது நிகழ்த்தப்படுகிறது. இது பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல, பங்கேற்பாளர்களுக்கும் பல்வேறு வகையான பொழுதுபோக்குகளை வழங்குகிறது. கோலாட்டம் மற்ற மாநிலங்களிலும் நடத்தப்படுகிறது, ஆனால் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்