/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
பாலவேணு கோபாலன் சந்நிதியில் நாதகானம்
/
பாலவேணு கோபாலன் சந்நிதியில் நாதகானம்

தில்லி ஷண்முகாநந்த சங்கீத சபாவும், அலக்நந்தா தார்மிக சமாஜும் இணைந்து வெங்கடேஸ்வரன் குப்புசாமியின் சங்கீத மாலையை ஸ்ரீ பால் வேணுகோபால் கிருஷ்ணர் சந்நிதியில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சி சூடாமணி ஸ்ரீ நிவாசன் நினைவு கச்சேரி என்பது குறிப்பிடத்தக்கது. அன்றையதினம் வயலினில் அரவிந்த் நாராயணன், மிருதங்கத்தில் மனோகர், கடத்தில் வருண்ராஜசேகர் வாசித்து சிறப்பித்தனர்.
'அருணோதயமே அன்பின் வடிவமே' என் அன்னையின் பாதம் பணிந்து அருமறைகள் போற்றும் ஆதிசக்தி, தயாபரி ,கருணை தெய்வமே காத்தருள் என்று பெளளியில் லால்குடி ஜெயராமனின் வர்ணத்தை தொடர்ந்து,கரங்களில் பாசம் அங்குசம் ஏந்திக்கொண்டு மல்லிகை ஜாதி சம்பங்கி ஆரங்கள் சூடியவரும், வல்லி விவாதத்திற்கு காரணமானவருமான வல்லப நாயகாவை பேகடாவில் தீட்சிதர் வரிகளில் பாடிக்கொண்டு அதில் வல்லபவில் ஸ்வரம் அமைத்து அழகுபடுத்திக்கொண்டு, இரு கண்ணிருக்கும் போதே விண்உயர் கோபுரம் காணவும் இந்த ஓட்டை சடலம் ஒடுங்கும் முன் சிதம்பர தேவனை காணவும் பாட்டால் நம்மை அழைத்துச் சென்றது அருமை.
அடுத்து வந்தது கல்யாணி ராக ஆலாபனை. தியாகராஜரின் ' அம்மா ராவம்மா துளசம்மாவை அரவிந்தனின் வயலின் துணையுடன் தளநேத்ரியை ஆராதித்துக் கொண்டு தொடர்ந்து விறுவிறுப்பான சாரஸமுகியை வழங்கிய கையோடு, மீண்டும் தியாகராஜர். வந்தநமோ ரகு வந்தனா சகானாவில் இதமாக வருடிக் செல்ல அடுத்து முகாரியில் சபரியின் மோட்ச பாக்யத்தை கேட்கும் பாக்யம் நமக்கு கிடைத்தது. அவளின் ஆதங்கத்தை வெளிப்படுத்த தேர்ந்தெடுத்த முகாரி அருமை. பாடல் நம் நெஞ்சை உருக்கியது உண்மை.'கனுலார சேவிஞ்சி..'கண்ணாரசேவித்து கண்மணி 'பலமுலனொ சகி'- பழங்களை அளித்து.. ஸ்வரம் நிரவல் பிரமாதம். மனோவும் வருணும் மிருதங்கம் மற்றும் கடத்தில் தனி வாசித்து அழகு சேர்த்தனர். ஆத்மார்த்தம் அமிர்தம் அமிர்தம்.
அன்றைய முக்கிய விருந்தினர் குரு கண்ணகுமாரின் வேண்டுகோளை ஏற்று ஆதி தாளத்தில் எல்லோருக்கும் பரிச்சியமான பண்டு ரீதி கோலுவை அவையோரை தலையசைத்து தாளமிட்டு ரசிக்க வைத்துக்கொண்டு ரம்யமான தீராத விளையாட்டுப் பிள்ளையை பாடி காஞ்சி காமாட்சி தில்லானாவுடன் நிறைவு செய்தார்.
சமாஜ் சார்பிலும், சபா சார்பிலும் கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி