/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
தில்லியில் யுவ நாதோர்சவ் கர்நாடக சங்கீத நிகழ்ச்சி
/
தில்லியில் யுவ நாதோர்சவ் கர்நாடக சங்கீத நிகழ்ச்சி
மார் 08, 2025

தில்லி கர்நாடக சங்கீத சபாவும் சுபசித்தி விநாயகர் கோவிலும் இணைந்து யுவ. நாதோர்சவ் கர்நாடக சங்கீத நிகழ்ச்சியை. கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
கர்நாடகா உடுப்பி லதாங்கி சகோதரிகள் அர்ச்சனா, மற்றும் சமன்வி இருவரும் இணைந்து மிக அருமையான இசை விருந்தை வழங்கினர். அன்றைய கச்சேரிக்கு வயலினில் ராகவேந்திராவும் மிருதங்கத்தில் அபிஷேக் அவதானியும் இணைந்து வாசித்தது சிறப்பு.
'மாமயூரமீதேறிவா '..நம்மை ரட்சிக்க என் பிரகார நாதனை தூரன் வரிகளில் பிலஹரியில் பாடி அழைத்துக் கொண்டு, தாசர் கிருதியை கம்பீரநாட்டையில் 'சரணு சித்தி விநாயகாவில்' மூலாதாரனை, முக்கண்ணன் மைந்தனை வலம் வந்து வணங்கி, அடுத்து கேட்க கிடைத்தது வேணுகான லோலுனி கானவேயி கீர்த்தனம். குழலிசை விரும்புவோனை காண ஆயிரம் கண்கள் வேண்டும் என கேதாரகெளளையில் இழைத்து பாடியது அருமை. விகசித பங்கஜவில் நிரவல் ஸ்வரம் அமைத்துக்கொண்டு அடுத்து பங்கயவதனத்தை பல்வேறு நடைகளில் பாடியது ரசிக்கும்படி இருந்தது.
விறுவிறுப்பான நிரமணி சுகதாவைத் தொடர்ந்து, ஊத்துக்காடு பற்றிய விளக்கத்துடன் அன்றைய முக்கிய கிருதியை கரகரப்ரியாவில் எடுத்தனர். கரகரப்ரியா ராகத்திற்கு ரத்னகம்பளம் விரித்து ரம்யமான ஆலாபனையுடன் வரவேற்பு அருமை. ராககேலி விலாச ப்ரகாசனை ராதா ஹ்ருதய விகாரனை சரோருகனை.. அபிஷேக்கின் தனி ஆவர்த்தனம் ராகவேந்திரா வயலின் துணையுடன் அனுபவிக்க வைத்தனர்.
அடுத்து உடுப்பி சகோதரிகள் வழங்கியது தாசக்ருதி. ரங்கையாவை தேன்மதுர குரலில் அழைத்தது அழகு. தேன், சர்க்கரையை குழைத்து ராகாபிஷேகம் அருமை. தாய்மொழியில் அனுபவித்து பாடுகையில் ரசிகர்கள் உள்ளம் தொட்டார்கள். வரப்போகும் ராமநவமிக்கு கட்டியம் கூறுவது போல ராமனைப் பூஜித்தால் எல்லா பிரச்சினைகளும் தீரும் துன்பமும் அகலும், இன்பம் பெருகும் துயரில்லா வாழ்வு கிடைக்கும் என்று பலவாறு சொல்லி நம்மை உற்சாகப்படுத்தி ராமாமிர்தம் நம் செவிக்கு தேவாமிர்தமாக ஒலிக்க வைத்து, இறுதியாக முருகனின் திருப்புகழ் பாடி நிறைவு செய்தனர்.
கர்நாடக சங்கீத சபா சார்பில் கலைஞர்களை முக்கிய விருந்தினர் கெளரவித்தார். அன்றைய மாலையில் திருப்புகழ் அன்பர் ஜெ.கிருஷ்ணன் ( ஜிக்கி மாமா) , ஹிந்துஸ்தானி பாடகர் அரவிந்த்குமார், வயலின் வித்வான் அரவிந்த் நாராயணன் ஆகியோர் சிறப்பு செய்யப்பட்டனர். நிகழ்வுகளை சபா சார்பில் குரு சரண் தொகுத்து வழங்கினார்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி