/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
எல்.இ.டி., பல்ப் தயாரிக்கும் அம்பிகா; கணவருக்கு வேலை கொடுத்த மனைவி
/
எல்.இ.டி., பல்ப் தயாரிக்கும் அம்பிகா; கணவருக்கு வேலை கொடுத்த மனைவி
எல்.இ.டி., பல்ப் தயாரிக்கும் அம்பிகா; கணவருக்கு வேலை கொடுத்த மனைவி
எல்.இ.டி., பல்ப் தயாரிக்கும் அம்பிகா; கணவருக்கு வேலை கொடுத்த மனைவி
ADDED : ஜூன் 02, 2025 12:18 AM

நாட்டில் கொரோனா தொற்று, ஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கியது. ஊரடங்கால், மக்கள் அவதிப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து பரிதவித்தனர். எப்படிப்பட்ட கஷ்டத்தை எதிர் கொண்டாலும், அதை சமாளித்து போராடினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதற்கு, அம்பிகா சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
கதக் மாவட்டம், கமலா நகர் தாலுகாவின் கோரெகல் கிராமத்தில் வசிப்பவர் அம்பிகா, 28. இவர் டெய்லராகவும், இவரது கணவர் வெங்கட் ஆட்டோ ஓட்டுநராகவும் உள்ளனர். இருவருமே நல்ல உழைப்பாளிகள். நாட்டில் கொரோனா பரவிய போது, பல குடும்பங்கள், ஒரு வேளை உணவுக்கு வழியின்றி தவித்தன. அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அம்பிகா, புத்திசாலித்தனமாக செயல்பட்டார்.
தொழிலதிபர்
தற்போது எல்.இ.டி., பல்புகளுக்கு தேவை அதிகம். மின்சாரத்தை மிச்சப்படுத்த இந்த பல்புகளை பயன்படுத்துகின்றனர். இதை உணர்ந்திருந்த அம்பிகா, எல்.இ.டி., பல்புகள் தயாரிக்க முடிவு செய்தார். யு டியூப் பார்த்து எப்படி பல்புகள் தயாரிப்பது என்பதை கற்றுக் கொண்டார். குறுகிய காலத்தில் கற்று தேர்ந்து, பல்புகள் தயாரிக்க துவங்கினார். இப்போது பெண் தொழிலதிபராக வளர்ந்துள்ளார்.
தன் வீட்டில் சிறிய கடை வைத்து, தானே தயாரித்த எல்.இ.டி., பல்புகளை விற்று வருகிறார். கிராமத்தின் இளைஞர்கள், இளம் பெண்கள் பலருக்கும் வேலை கொடுத்துள்ளார். 9 வாட், 12 வாட், 18 வாட் பல்புகள் தயாரிக்கிறார். இவர் தயாரிக்கும் எல்.இ.டி., பல்புகள், பீதர், அவுராத், பால்கி உட்பட பல்வேறு இடங்களில் விற்பனையாகின்றன. ஒரு பல்பு 70 முதல் 140 ரூபாய் வரை விற்கிறார். இதில் கிடைக்கும் வருவாயில், தன் குடும்பத்தை காப்பாற்றுகிறார்.
எல்.இ.டி., பல்புகளுக்கு தேவையான கச்சாப்பொருட்களை, மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் இருந்து வரவழைக்கிறார். ஆட்டோ ஓட்டுநராக இருந்த, இவரது கணவர் வெங்கட், கொரோனா நேரத்தில், வாடிக்கையாளர்கள் கிடைக்காமல் ஆட்டோ ஓட்டுவதை நிறுத்திவிட்டு, வேலை தேடி ஊர், ஊராக அலைந்தார். தன் கணவருக்கும், அம்பிகா வேலை கொடுத்துள்ளார். இவர் தயாரிக்கும் பல்புகளுக்கு, கதக் மாவட்டத்தில், நல்ல டிமாண்ட் உள்ளது.
வருவாய்க்கு வழி
தன் குடும்பத்தை காப்பாற்றுவதுடன், பலருக்கு வேலை கொடுத்து, அவர்களின் வருவாய்க்கு வழி வகுத்துள்ளார். இதனால் கிராமமே அம்பிகாவை கொண்டாடுகிறது. உழைக்க தயாராக இருந்தும், வேலை கிடைக்கவில்லை. அலைந்து, திரிந்தும் பயன் இல்லை என, இயலாமையால் கையை பிசைந்து கொண்டு காலம் கடத்தாமல், மன உறுதியும், நம்பிக்கை, விடா முயற்சி இருந்தால் போதும். எந்த கடினமான சூழ்நிலையையும் சமாளித்து, வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதற்கு, அம்பிகா சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
- நமது நிருபர் -