ADDED : ஜூன் 02, 2025 12:20 AM

நாட்டின் பல பகுதிகளில் தற்போது தலைமுடி விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. அழகு கலைக்காகவும், விக் தயாரிக்கவும் தலைமுடி அதிகம் பயன்படுகிறது. கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரிலும் பல இடங்களில் தலைமுடி விற்பனை நடக்கிறது.
வீடு, வீடாக சென்றும், முடி காணிக்கை செலுத்தும் இடத்திற்கும் சென்றும் தலைமுடியை சேகரித்து வர, தலைமுடி விற்பனை செய்வோர் ஆட்களை வேலைக்கு நியமித்து உள்ளனர். தலைமுடியை சேகரித்து விற்பவர்களுக்கு கணிசமான லாபமும் கிடைக்கிறது. இவர்களில் ஒருவர் பெங்களூரின் ஈஸ்வரம்மா, 37.
பழங்குடி சமூகத்தை சேர்ந்த இவர் வீடு, வீடாக சென்று ஊசி, பாசி, ஹேர் கிளிப்புகள் விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார். ஆனால் போதிய லாபம் கிடைக்கவில்லை. இந்நிலையில், 'ஹசிரு தலா' என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஈஸ்வரம்மாவை அடையாளம் கண்டு, அவருக்கு வீடு, வீடாக சென்று தலைமுடியை சேகரிக்கும் வேலையை கொடுத்தது.
தற்போது நகரின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் அவர், வீடுகள், கோவில்களில் இருந்து தலைமுடிகளை சேகரித்து வந்து தொண்டு நிறுவனத்திடம் கொடுக்கிறார்.
இந்த பணி பற்றி ஈஸ்வரம்மா கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக தலைமுடி சேகரிக்கும் வேலை செய்கிறேன். வருமானம் கிடைக்கிறது. உதிர்ந்த தலைமுடியை வீணாக துாக்கி போடுவதற்கு பதில் அதை சேமித்து வைத்திருந்தால், விக் தயாரிக்க கூட உதவும். எங்கள் சமூகத்தை சேர்ந்த 593 பேர் பெங்களூரு ரூரல் டி.பாளையா, நாகவரா, பொம்மனஹள்ளி, மாகடி சாலையில் வசிக்கின்றனர். எங்களை அரசு அடையாளம் கண்டு உள்ளது.
கொரோனா பரவலுக்கு முன்பு முடிசேகரிக்கும் தொழில் நன்றாக இருந்தது. அதற்கு பின் எதிர்பார்த்த அளவு இந்த தொழிலில் லாபம் இல்லை. ஆனாலும் தொடர்ந்து செய்து வருகிறோம். முடியின் தரத்தை பொறுத்து தான் பணம் கிடைக்கிறது. நரைத்த, வண்ணம் தீட்டிய முடிகளுக்கு குறைந்த விலையே கிடைக்கும்.
சலுான்களில் இருந்து நான் எப்போதும் முடி சேகரிப்பது இல்லை. அங்கு அனைத்து தலைமுடியும் ஒன்றாக இணைந்து விடும். முடிசேகரிக்கும் தொழிலுக்கு வந்த புதிதில் மக்கள் என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர். ஆனால் இப்போது அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு தருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
--- நமது நிருபர் -