UPDATED : ஜூன் 28, 2025 10:35 AM
ADDED : ஜூன் 27, 2025 11:28 PM

முருங்கைக்கீரையில் வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், இரும்பு, புரதம், நார் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முருங்கைக்கீரையை உணவில் தொடர்ந்து எடுத்து கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. செரிமான பிரச்னை நீங்குவதுடன், ரத்த சர்க்கரை அளவும் கட்டுப்படுத்தப்படுகிறது.
பெரியவர்கள் முருங்கைக்கீரை விரும்பி சாப்பிட்டாலும், குழந்தைகள் கீரை சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடிப்பர். அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கான சூப்பர் ரெசிபியாக உள்ளது முருங்கைக்கீரை இடியாப்பம்.
தேவையான பொருட்கள்
★ ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை
★ அரை டீஸ்பூன் சீரகம்
★ அரை டீஸ்பூன் நெய்
★ ஒரு கப் தேங்காய் துருவல்
★ நாட்டு சர்க்கரை தேவையான அளவு
★ 2 ஏலக்காய்
செய்முறை
முருங்கை குச்சியில் உள்ள இலைகளை உருகிய பின், தண்ணீரில் நன்கு கழுவவும். பின், மிக்ஸி ஜாரில் போட்டு சீரகம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்து எடுத்த முருங்கைக்கீரை கலவையை, ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரிசி மாவு கலந்து நெய் ஊற்றி, தேவையான அளவு சூடுதண்ணீர் ஊற்றிஇடியாப்ப பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின், வழக்கம் போல இட்லி தட்டில் இடியாப்பம் பிழிந்து மூடி வேக விடவும். இதற்கிடையில் மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சேர்த்து ஏலக்காய் போட்டு அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். இடியாப்பம் வெந்த பின், அரைத்து வைத்த தேங்காய் பால், நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் சுவையான முருங்கைக்கீரை இடியாப்பம் தயார். இந்த இடியாப்பம் பச்சை கலரில் இருப்பதால், குழந்தைகளும் ஏதோ புதிய 'டிஸ்' என்று விரும்பி சாப்பிடுவர்
- நமது நிருபர் -.