/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
யானைகள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கும் சைரன்
/
யானைகள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கும் சைரன்
ADDED : ஜூன் 01, 2025 06:44 AM

யானைகளின் நடமாட்டம் பற்றி, மக்களை எச்சரிக்கும் வகையில், புதிய சைரன் கருவியை அரசு சாரா தொண்டு நிறுவனம் தயாரித்துள்ளது. இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டதாகும்.
குடகு மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் காட்டு யானைகளின் தொந்தரவு அதிகம். காபி, டீ எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், தினமும் உயிரை கையில் பிடித்து கொண்டு, பணிக்கு செல்லும் சூழ்நிலை உள்ளது. காட்டு யானைகள் எந்த திசையில் இருந்து வரும் என்பதே தெரியாது. திடீரென எதிரே வந்து அச்சுறுத்தும். தொழிலாளர்களை மிதித்து கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.
காட்டு யானைகளின் பிரச்னைக்கு, தீர்வே இல்லையா என, மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த பிரச்னைக்கு, 'சினேஹா' எனும் சப்போர்ட் பார் நெட் ஒர்க் மற்றும் எக்ஸ்டென்ஷன் ஹெல்த் ஏஜென்சி என்ற, அரசு சாரா தொண்டு அமைப்பு புதிய தீர்வு கண்டுபிடித்துள்ளது.
குடகின், விராஜ்பேட் தாலுகாவின் பல்வேறு இடங்களில், வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து, பொது மக்களை எச்சரிக்க சைரன் கருவியை தயாரித்துள்ளது.
விராஜ்பேட்டின் படக பனங்காலா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், யானைகள் தொந்தரவு அதிகம் உள்ள இடங்களில் 12 சைரன் கருவிகள் பொருத்தும் பணியை துவக்கியுள்ளது. இவைகள் தானியங்கியாக செயல்படும் திறன் கொண்டவை. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டதாகும். வரும் நாட்களில் மற்ற மாவட்டங்களுக்கும் திட்டத்தை விஸ்தரிக்க, 'சினேஹா' அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, சினேஹா அமைப்பின் நிர்வாக இயக்குநர் ராமசாமி கூறியதாவது:
ஒடிஷா மற்றும் குடகு மாவட்டங்களில், சினேஹா அமைப்பு செயல்படுகிறது. இப்பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கும் சைரன் கருவிகள் பொருத்துகிறோம். எங்கள் அமைப்பு 'சினேஹா கல்ப்வைக் எலிபென்ட் டிராக்கர்' என்ற மொபைல் செயலியை மேம்படுத்தியுள்ளது. இதை பயன்படுத்தி, காட்டு யானைகள் எங்குள்ளன என்பதை கண்டுபிடிக்கலாம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட சைரன் கருவிகள், யானைகளின் நடமாட்டத்தை கண்டுபிடிக்கும். யானை நடமாடும் ௧ கி.மீ., சுற்றளவில் வசிக்கும் மக்களை, சைரன் ஒலித்து எச்சரிக்கும். சினேஹா கல்ப்வைக் எலிபென்ட் டிராக்கர் செயலியை டவுன்லோட் செய்துள்ளவர்கள், யானைகளின் நடமாட்டத்தை தெரிந்து கொள்ளலாம்.
மொபைல் செயலி, சைரனுடன் இணைப்பு ஏற்படுத்தப்படும். தற்போதைக்கு டிராக் கேமராக்கள் வைத்துள்ளோம். எங்கள் அலுவலக ஊழியர்கள், கேமராக்களை கண்காணிக்கின்றனர்.
இக்கேமராக்கள் ஒவ்வொரு நிமிடமும் படங்களை கிளிக் செய்யும். இந்த படங்களை ஊழியர் ஆய்வு செய்வார். எங்காவது யானைகள் இருந்தால், சைரன் ஒலிக்கும். மொபைல் செயலியில், குரல் வழியாக எச்சரிக்கும் வசதியும் உள்ளது.
வன விலங்குகளை கண்காணிக்க, எங்கள் அமைப்பு டிராக்கிங் குழு அமைத்துள்ளது. சைரன் கருவிகள் பொருத்த, சக்டென் காபி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நிதியுதவி வழங்குகிறது. வனத்துறை ஒருங்கிணைப்பில், திட்டத்தை செயல்படுத்துகிறோம்.
இவ்வாறு கூறினார்
- நமது நிருபர் -.