/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
பழமையான ஆல மரத்தை சுற்றி பார்க்கலாம் வாங்க!
/
பழமையான ஆல மரத்தை சுற்றி பார்க்கலாம் வாங்க!
ADDED : மே 28, 2025 11:07 PM

அந்தமானுக்கு சென்றாலும் சுற்றுலாவே. அருகில் உள்ள அத்திபெல்லேவிற்கு சென்றாலும் சுற்றுலாவே. முக்கியமான விஷயம் எந்த இடத்திற்கு சென்றாலும், அங்கு எவ்வளவு மன நிம்மதி, உற்சாகத்துடன் இருக்கிறோம் என்பதே.
ஆனால், இதை பலரும் புரிந்து கொள்வதில்லை. பல மைல் தூரம் கடந்து சென்றாலும்; அதிகமான பணத்தை செலவு செய்வதையும்; இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவதையே சுற்றுலாவாக தவறாக நினைக்கின்றனர். இது போன்றவர்களுக்காவே பெங்களூரில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்து தொடர்ச்சியாக கட்டுரைகள் எழுதி கொண்டிருக்கிறோம். அவ்வகையில், இன்று பெங்களூரில் உள்ள பழமையான ஆலமரத்தோடு அமைந்துள்ள பூங்காவை பற்றி எடுத்துரைக்கிறது கட்டுரை.
பெங்களூரு நகரம், கேட்டோஹள்ளி என்ற கிராமத்தில் அமைதியாக அமைந்து உள்ளது தொட்ட ஆல மரம். தொட்ட ஆல மரம் என்றால் பெரிய ஆல மரம் என்று பொருள். இந்த ஆலமரம் 400 ஆண்டுகள் பழமையானது. இதை பார்க்க நாள்தோறும் பலர் வருகை தருகின்றனர். இதனால், மரத்தை சுற்றியுள்ள பகுதி பூங்கா போல அமைக்கப்பட்டு உள்ளது.
இது 3 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த மரம் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய ஆலமரமாகும். இந்தியாவில் இரண்டாவது பெரிய மரமாக கருதப்படுகிறது.
இந்த மரம் பார்ப்பதற்கு மிக பிரமாண்டமாக உள்ளது. இதை முழுதாக பார்த்து முடிப்பதற்குள் மூச்சு வாங்கும். அவ்வளவு பெரிய மரமாக காட்சி அளிக்கிறது. இதற்கு 2000ல் ஏற்பட்ட இயற்கை நோயின் காரணமாக, மரத்தின் விழுதுகள் நோய்வாய்ப்பட்டன. இதனால், பல விழுதுகள் நாசமாகின.
இந்த மரத்தில் பல குரங்குகள் தொங்கி கொண்டு, விளையாடுவதை பார்க்க முடியும். இங்கு வருகை தரவோ, வாகனங்களை நிறுத்தவோ கட்டணம் கிடையாது. காலை, மாலை நேரங்களில் நடப்பதற்காக நடைபாதை உள்ளது. இதில், நடைபயிற்சி செய்வதற்காகவே, பலரும் வருகை தருகின்றனர்.
இங்கு அமர்ந்து வேடிக்கை பார்ப்பதற்காக பல கட்டைகள் உள்ளன. இதில், உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடியே பொழுதை கழிக்கலாம். புத்தக வாசிப்பு, யோகா போன்றவற்றிற்கு சிறந்த இடமாக உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஆலமரத்தில் உள்ள வேர், கிளை, தண்டு ஆகிய மூன்றும் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரை குறிக்கின்றன என்பது அப்பகுதியினரின் நம்பிக்கையாக உள்ளது.
இங்கு வருவோர், தங்கள் குடும்பத்துடன் வருகை தரலாம். தங்கள் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடலாம். இங்கு வருவதால் செலவும் மிச்சம். பட்ஜெட்டிலும் துண்டு விழாது. தனியாக வருவோர் பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து, பல மைல் துாரம் செல்லாமலே மன நிம்மதியாக இயற்கை சூழலில் சிறிய ஓய்வு எடுத்து மகிழலாம்.
ஆக... குடும்பம், தனிமை, யோகா, புத்தக வாசிப்பு என அனைத்து பிரிவினருக்கும் பொருத்தமான ஒரு இடமாக இந்த தொட்ட ஆல மரம் இருக்கும். இங்கு காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை அனுமதி உண்டு. சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதிகளும் உள்ளது.
ஆக... குடும்பம், தனிமை, யோகா, புத்தக வாசிப்பு என அனைத்து பிரிவினருக்கும்
பொருத்தமான ஒரு இடமாக இந்த தொட்ட ஆல மரம் இருக்கும். இங்கு காலை 8:30 மணி
முதல் மாலை 5:30 மணி வரை அனுமதி உண்டு. சுத்தமான குடிநீர், கழிப்பறை
வசதிகளும் உள்ளது.
- நமது நிருபர் -