கள்ளக்குறிச்சி வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி சிறப்பு வழிபாடு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வாராஹி அம்மன் கோவிலில் நடந்த பஞ்சமி திதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் உள்ள பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில், பஞ்சமி திதியையொட்டி, இன்று காலை 10:00 மணிக்கு வாராஹி அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், விபூதி, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு பட்டு சார்த்தி, தங்க கவச அலங்காரத்தில் மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் உள்ள ஜல வாராஹி அம்மனுக்கு பெண்கள் அம்மிக்கல்லில் பச்சை விரலி மஞ்சளை அரைத்து சார்த்தி நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர். மேலும் மாலை 4:00 மணிக்கு சிறப்பு மகா யாகம், மிளகாய் யாகம், ஊஞ்சல் உற்சவமும், மாலை 6:00 மணிவரை தேங்காய் தீப வழிபாடும் நடந்தது. வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சாய் தீக்சித் செய்திருந்தார்.