அனந்தீஸ்வரர் கோவில் வைகாசி விசாகம் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
காட்டுமன்னார்கோவில்: வைகாசி விசாக பிரமோற்சவ கொடியேற்ற உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். காட்டுமன்னார்கோவில், உடையார்குடி, அனந்தீஸ்வரர் கோவில் வைகாசி விசாகம் பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை சவுந்தரநாயகி சமேத அனந்தீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பிரமோற்சவம் ரிஷப கொடியேற்றப்பட்டது. இதனையொட்டி தினம் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைப்பெறும், காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், இரவு சுவாமி சிறப்பு வாகனத்தில் வீதி புறப்பாடு செய்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். உற்சவத்தில் வரும் 27ம் தேதி திருக்கல்யாணம் உற்சவம், 29ம் தேதி திருத்தேரோட்டம், 30ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்கிறது.