கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
நத்தம்; நத்தம் -கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கணபதி ஹோமம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின் மேளதாளம் முழங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் மூலவர் கைலாசநாதர், செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெறும். இதில் அம்மன் சிம்மம், மயில், பூதம், அன்னம், யானை, ரிஷப வாகனங்களில் எழுந்தருளி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வருகிற மே.29 காலை 7.45 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெறுகிறது. மறுநாள் பூப்பல்லாக்கு நிகழ்ச்சி நடக்கிறது. மே.31காலை உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. முன்னதாக கொடியேற்ற விழாவில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பாலசரவணன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் குருக்களும் செய்து வருகின்றனர்.