உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நாளை தேரோட்டம்:

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நாளை தேரோட்டம்:

திருப்புத்தூர்;  திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவை முன்னிட்டு நாளை மாலை தேரோட்டம் நடைபெறும். 30ம் தேதி தெப்ப உத்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது.

குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாக விழா மே 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து தினசரி இரவில் வாகனங்களில் சுவாமி,அம்பாள் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று எட்டாம் திருநாளை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு நடராஜர்-சிவகாமி அம்பாள் அலங்காரத்தில் கேடகத்தில் எழுந்தருளி தீபராதனை நடந்தது. பின்னர் சுவாமி புறப்பாடாகி திருவீதி உலா நடந்தது. இரவில் குதிரை வாகனங்களில் சுவாமி,அம்பாள் எழுந்தருளி தீபராதனை நடந்தது. பின்னர் திருவீதி உலா நடந்தது.

நாளை 9ம் திருநாளை முன்னிட்டு காலை 6:00 மணி அளவில் சுவாமி,அம்பாள்,விநாயகர் 3 தேர்களில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் நடைபெறும். மாலை 4:35 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறும். 30ம் தேதி காலை 10:30 மணிக்கு சீதளி தெப்பக்குளத்தில் தீர்த்தம் வழங்குதலும், இரவு 8:00 மணிக்கு தெப்ப மண்டபத்தில் சுவாமி எழுந்தருளி தெப்பமும் நடைபெறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !