திருவேங்கடநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
அன்னூர்; சொலவம்பாளையம், திருவேங்கடநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
குப்பனூர் ஊராட்சி, சொலவம்பாளையத்தில், நூறு ஆண்டுகள் பழமையான திருவேங்கடநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த, 25ம் தேதி துவங்கியது. கடந்த 27ம் தேதி, காலை திருவிளக்கு பூஜை, சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம் நடந்தது. மாலையில் முதற்கால வேள்வி பூஜை, வேத பாராயணம், ஐம்பொன் நவரத்தினம் பிரதிஷ்டை செய்தல் நடந்தது. இரவு எண் வகை மருந்து சாற்றப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு, விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடந்தது. காலை 8:20 மணிக்கு, விமான கோபுர கலசம், மூலவர் திருவேங்கடநாத பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, தச தரிசனம், தச தானம் நடந்தது. திருவேங்கடநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.