பழநி மண்டு காளியம்மன் கோயில் பூ குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி, கே.வேலூர் சுயம்பு மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 34 ஆம் ஆண்டு பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழநி, நெய்க்காரப்பட்டி, கே.வேலூர் சுயம்பு மண்டு காளியம்மன்,உச்சி காளியம்மன் கோயில் 34 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு மே.26 இரவு 11 மணிக்கு மேல் சாமி சாட்டுதல் முகூர்த்த கால் நடுதல் நடந்தது. மே.27 அன்று பூ குண்டம் இறங்கும் பக்தர்கள் மாலை அணிந்தனர். ஜூன் 5, பூக்குழி கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 8, விநாயகர் விழா, நேற்று ஜூன் 9ல் சண்முக நதியில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அன்று இரவு பூக்குழி வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை (ஜூன் 10), அதிகாலை 6:00 மணிக்கு மேல் பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். விழாவில் ஆர்.வாடிப்பட்டி, பெரிய கலையம்புத்தூர், நெய்க்காரப்பட்டி சின்ன கலையம்புத்தூர், அ.கலையம் புத்தூர், அழகாபுரி, பாப்பம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பொங்கல் வைத்தல், முடி இறக்குதல், கிடா வெட்டுதல், பூச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். வானவேடிக்கை நடைபெற்றது. நாளை ஜூன் 12 விளக்கு பூஜை நடைபெறும். குண்டம் இறங்கும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கூட்ட நெரிசல் காரணமாக பெண்கள் சிலர் மயங்கி விழுந்தனர். பழநி-கொழுமம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்தது.