சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவம் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
செஞ்சி அடுத்த சிங்கவரம் மலை மீதுள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவில் 10 நாள் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு விசேஷ திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகமும் செய்தனர். 9.30மணிக்கு கொடியேற்றமும், மகா தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து 10 மணிக்கு சூர்ய பிரபை வாகனத்திலும், மாலை 6 மணிக்கு ஹம்சவாகனதில் சாமி வீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், உபயதாரர்கள் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர். நாளை 2ம் நாள் விழாவாக சிம்ம வாகனமும், 12ம் தேதி அனுமந்த வாகனமும், 13 ம் தேதி சேஷ வாகனமும், 14ம் தேதி முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பெரிய திருவடி எனப்படும் கருட சேவையும், 15ம் தேதி யானை வாகனமும், 16ம் தேதி காலை 8.30 மணிக்கு முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.