வேதகிரீஸ்வரர் கோவில் அலுவலர் குடியிருப்பு இடிக்கப்பட்டதால் சர்ச்சை
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் கோவிலில் பாழடைந்த செயல் அலுவலர் குடியிருப்பு இடித்து அகற்றப்பட்டது.
திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் செயல் அலுவலராக பணியாற்றுவோர் வசிப்பதற்காக, இங்குள்ள பெரிய தெருவில் 50 ஆண்டுகளுக்கு முன் ஓட்டு வீடு கட்டப்பட்டது. பழமையான வீட்டில் அலுவலர்கள் வசித்து வந்தனர். தற்போது அலுவலர் குடியிருப்பு சேதமடைந்து, ஓடுகள் உடைந்து பாழடைந்து வருகிறது. இதனால் அந்த குடியிருப்பை அலுவலர்கள் கைவிட்டனர். இந்த குடியிருப்பை இடித்து, இடத்தை பராமரிக்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. முன்னறிவிப்பு இன்றி பாழடைந்த குடியிருப்பு, பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று இடித்து அகற்றப்பட்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து, கோவில் நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, செயல் அலுவலர் வெங்கடேசன் கூறியதாவது:
பழங்கால குடியிருப்பு கட்டடம் உள்ள இடம் மட்டுமே கோவிலுக்கு சொந் தமானது. இருபுறமும், தனியார் வீடுகள் உள்ளன. அங்கு வசிப்பவர்கள், பாழடைந்த கட்டட பகுதியில் இருந்து, பாம்புகள் வருவதாகவும், கட்டட வளாகத்தை துாய்மைப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டனர். பாழடைந்த கட்டடத்தால் பயனில்லை என்பதால் தான் இடித்தோம். அந்த இடத்தை குத்தகைக்கு அளித்தால், கோவிலுக்கும் வரு வாய் கிடைக்கும். அதற்கு ஏற்பாடு செய்ய உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.