கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு தமிழக முதல்வர் விஜய் நாளை வருகை
உடுப்பி: தமிழக முதல்வர் விஜய், உடுப்பி மாவட்டத்தின், பிரசித்தி பெற்ற கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு, நாளை வருகிறார்.
உடுப்பி மாவட்டம், பைந்துார் தாலுகாவில் உள்ள கொல்லுார் மூகாம்பிகை கோவில், மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் என, பலரும் இக்கோவிலை தரிசனம் செய்துள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மூகாம்பிகையின் தீவிர பக்தர். கோவிலுக்கு தங்கவாள் காணிக்கை செலுத்தினார். மற்றொரு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் வந்தார். சமீபத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காவும், கொல்லுாருக்கு வந்து, மூகாம்பிகையை தரிசித்தார். இந்நிலையில், தமிழக புதிய முதல்வர் விஜய், இக்கோவிலுக்கு நாளை வருகிறார். முதல்வரான பின், தற்போது, முதன் முறையாக கர்நாடகாவுக்கு வருகிறார். டில்லியில் இருந்து, மதியம் 12:30 மணிக்கு, சிறப்பு விமானம் மூலம், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வரும் அவர், சாலை வழியாக பைந்துாரின், கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று, தரிசனம் செய்வார். அங்கு நடக்கும் சிறப்பு பூஜைகளில் அவர் பங்கேற்பார். பின், மங்களூரு விமான நிலையத்துக்கு திரும்பி, சிறப்பு விமானத்தில் சென்னைக்கு செல்வார்.
தமிழக முதல்வர் விஜய் வருவதால், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு, கர்நாடக போலீசாரிடம் தமிழக போலீசார், நேற்று, வேண்டுகோள் விடுத்துள்ளனர். உடுப்பி மாவட்ட போலீஸ் துறையும், மூகாம்பிகை கோவில் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தமிழக முதல்வர் விஜய் பயணிக்கும் பாதை, மூகாம்பிகை வனப்பகுதியாகும். சவுபர்ணிகா ஆற்றின் நீர் பிடிப்பு பகுதி அருகில் உள்ள வனப்பகுதியை கடந்து செல்ல வேண்டியுள்ளதால், அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடும் நபர்களை கண்காணிக்கும்படி, வனத்துறை ஊழியருக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, விஜய் பயணிக்கும் விமான நிலையம், கோவில் வளாகம், பயண பாதைகளில் வாகன சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது.