பசு மாட்டின் பால்தான் பூலோக அமிர்தம்
பல்லடம்; பிறந்த குழந்தைக்கும், சுவாமியின் பூஜைக்கும் பயன்படுத்தும் பசு மாட்டின் பால் தான் பூலோகத்தின் அமிர்தம் என, பல்லடம் அருகே நடந்த அமாவாசை வழிபாட்டில் அறிவுறுத்தப்பட்டது.
பல்லடத்தை அடுத்த, வெங்கிட்டாபுரத்தில், அதர்வண பத்ரகாளி பீடம் உள்ளது. இங்கு, பிரத்தியங்கிரா தேவி மூலவராக அருள்பாளிக்கிறார். நேற்று, அமாவாசையை முன்னிட்டு சிறப்பு கேள்வி வழிபாடுகள், பூஜைகள் நடந்தன. நிக்கும்பாலா யாகத்தை துவக்கி வைத்து அதர்வண பத்ரகாளி பீடாதிபதி தத்தகிரி சுவாமிகள் பேசியதாவது: தர்மத்துக்கு விரோதமாக எந்த ஒரு காரியத்துக்காகவும் நாம் சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது. நோய் நொடி இல்லாத வாழ்க்கை, திருமணம், குழந்தை பேரு, நல்ல வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றை தான் சங்கல்பமாக கேட்க வேண்டும்.
கோ பூஜை செய்வது என்பது சாலச் சிறந்தது. வீட்டில் பசுமாடு வளர்த்து பால் கறப்பது என்பது அவ்வளவு விசேஷமானது. சுவாமி பூஜைக்கு பயன்படுத்துகிறோம். பிறந்த குழந்தைக்குள் கொடுக்கிறோம். பூலோகத்தில் கிடைக்கக்கூடிய அமிர்தம்தான் பசுவின் பால். ஒருவர் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பித் தரும் முன் இறந்து விட்ட நிலையில், அவரது வாரிசுகள் என்னதான் அவருக்கு தர்ப்பணம் செய்தாலும் அது அவரை சென்றடையாது. இது போன்ற பாவங்கள், தோஷங்களை நிக்கும்பலா யாகத்தின் மூலமாகத்தான் நிவர்த்தி செய்ய முடியும். எதற்காக விளக்கு ஏற்றுகிறோம், யாகம் செய்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் செய்கிறார்கள் நாங்களும் செய்கிறோம் என்று இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார். வேள்வி வழிபாட்டை தொடர்ந்து, சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் பிரத்யங்கரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது..