மூணாறு சுப்பிரமணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 24ல் நடக்கிறது
மூணாறு; மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் ஜூன் 24ல் நடக்கிறது.
மூணாறு சுப்பிரமணிய சுவாமி கோயில் பழமை வாய்ந்ததாகும். இந்த கோயில் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவானதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. ஆரம்பத்தில் மலைவாழ் மக்கள் தங்களின் இஷ்ட தெய்வங்களான முருகன், வள்ளி, தெய்வானையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அதனை உறுதிபடுத்தும் வகையில் கார்த்திகை, பங்குனி உத்திரம் பண்டிகையின் போது மலைவாழ் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அவர்கள் முதல் நாளே சுவாமியை தரிசனம் செய்து நேர்த்தி கடன் செலுத்துவது இன்று வரை நடைமுறையில் உள்ளது.
இந்த கோயில் பழநி தண்டாயுதபாணி கோயிலில் பின்பற்றப்படும் பூஜை உள்பட ஐதீகங்கள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியமுக்கிய திருவிழாக்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோயில் அரை நூற்றாண்டுகளுக்கு மேல் கும்பாபிஷேகம் நடக்கவில்லை. இந்து தேவஸ்தானம் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி கோயில் புனரமைக்கும் பணி ரூ. பல கோடி செலவில் ஐந்து ஆண்டுகளாக நடந்தது. தற்போது பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு ஜூன் 24ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை இந்து தேவஸ்தானம் குழு தலைவர் பாபுலால், துணை தலைவர் கணேசன், செயலாளர் ஜெயராம், பொருளாளர் வைத்தீஸ்வரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.