ஆண்டுக்கு ஒரு முறை திறக்கும் கோவில்; மகாலிங்கேஸ்வரரை தரிசித்த பக்தர்கள்
குன்னூர்: குன்னூரில் ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும், சுயம்பு மகா லிங்கேஸ்வரர் கோவில், இன்று திறக்கப்பட்டு நடந்த, வழிபாடுகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் கோத்தகிரி சாலையில், ஆழ்வார்பேட்டை அருகே முடியக்கி பகுதியில், படுகரின மக்களின் பூர்வீக கோவிலான மகா லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், ஜூன் மாதம், திங்கள் கிழமையில் ஒரு நாள் மட்டும், கோவில் திறக்கப்பட்டு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு திருவிழா, இன்று காலை 7:00 மணிக்கு துவங்கியது. முன்னதாக, கோடமலை கிராமத்தில் இருந்து, அதிகாலை 5:00 மணிக்கு மக்கள், பூஜை பொருட்களுடன் நடை பயணமாக கோவிலுக்கு வந்தனர். கோவிலில், நெய் விளக்கேற்றிய பின் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். விழாவில், கிராம மக்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஐயனை தரிசனம் செய்தனர். படுகரின மக்கள் பாரம்பரிய உடைணிந்து வந்த பங்கேற்று வழிபட்டனர். மதியம் 1:00 மணியளவில் விழா நிறைவு பெற்றது. கோடமலை மக்கள் கூறுகையில், " கிராமத்தில், முதல் கன்று ஈன்ற மாட்டின் பாலை, பச்சை மூங்கிலில் சேகரித்து, அந்த பாலில் மகா லிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் நடத்தப்படும். இந்த மாட்டின் பாலில் தயாரித்த நெய் கோவிலில் விளக்குக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த விளக்கு அணையும் வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவர். இந்த விழாவை தொடர்ந்து, மற்ற கிராமங்களில் தெவ்வப்பா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும், " என்றனர்.