கள்ளக்குறிச்சி கோவிலில் அன்னதான பணி ஹிந்து அறநிலையத்துறை அலுவலர் ஆய்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்து வரும் அன்னதான பணிகளை உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவில், பரிக்கல் லஷ்மி நரசிம்மர் கோவில், சின்னசேலம் திரவுபதியம்மன் கோவில்களில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் தினசரி மதிய வேளைகளில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு நாளில் 50 பேர்களுக்கு உணவு வழங்கும் வகையில் இத்திட்டம் கடந்த 2017 முதல் நடந்து வருகிறது.
இப்பணிகளின் தரம் குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறையின் விழுப்புரம் கோட்ட அலுவலக உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஸ்வரி, கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் திடீர் ஆய்வு செய்தார். உணவு சமைக்கும் இடம், வழங்கும் முறைகள் மற்றும் உணவின் தரம் ஆகியவைகளை ஆய்வு செய்த அலுவலர், அனைவருக்கும் சுத்திரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். தேவையான சமையல் பாத்திரங்கள், டம்ளர்கள் மற்றும் அமர்ந்து உணவருந்த தேவையான டேபிள்கள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த அறிவுறுத்தினார்.
மேலும் சிவன் கோவிலின் அருகே விரைவில் அன்னதான கூடம் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார். உதவியாளர் சசிக்குமார் உடனிருந்தார்.