திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் வெள்ளி கவசத்தி்ல் சுவாமி; பக்தர்கள் குவிந்தனர்
திருநள்ளாறு உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த சனீஸ்வர பகவானை ஏராளமான பக்தர்கள் புனித நீராடி எள் தீபம் ஏற்றி வழிபட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி, காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இன்று ஆடி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீசனிபகவானுக்கு நல்லெண்ணை, மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும்,வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் மகாதீபாராதனையும் நடைபெற்றது. அதிகாலை முதல் வரும் பக்தர்கள் நளதீர்த்தத்தில் புனித நீராடி வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலிக்கும் நளன்கலி தீர்த்த விநாயகரை வழிபட்டு பின்னர் எள் தீபமேற்றி வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீசனிபகவானை தரிசித்து அருள்பெற்றனர்.