உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் கட்டுமான பணி; சித்ரவான வரிசைக்கல் துவக்க விழா

ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் கட்டுமான பணி; சித்ரவான வரிசைக்கல் துவக்க விழா

அவிநாசி; அவிநாசி மங்கலம் ரோட்டில் தாமரைக் குளம் கரைப்பகுதியில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலில் கட்டட திருப்பணியில் கல்கார வரிசை முதலாவதாக சித்ரவான வரிசைகள் துவக்க விழா கோலாகலமாக நடைபெற்றது.


கொங்கேழு சிவ ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரலாற்று சான்று உடையதாக விளங்கும் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் அவிநாசி மங்கலம் ரோட்டில் உள்ளது. முதலை உண்ட பாலகனை பாடல் பாடி மீட்டெடுத்த சுந்தரமூர்த்தி நாயனார் பெருமானுக்கு இங்கு கோவில், முதலை வாயில் இருந்து பிள்ளையை முழுவதுமாக உயிருடன் மீட்டெடுத்த தாமரை குளத்தின் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகளான நிலையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து சுவர்களில் விரிசல் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள மண்டபங்களில் உள்ள தூண்கள் இடிந்து விடும் நிலையிலும் இருந்தது. இதன் காரணமாக பக்தர்கள் தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் மற்றும் மண்டபங்களை மராமத்து பணிகள் செய்து கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் மேற்கொள்ள கோரிக்கை விடுத்தனர்.


இதனையடுத்து,உபயதாரர்கள் மூலம் ஹிந்து சமய அறநிலையத்துறையினர் சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் மற்றும் மண்டபம் திருப்பணி வேலைகள் துவங்க, கடந்த ஆண்டு ஜனவரி 21ம் தேதி திருப்பணிகள் துவங்குவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியது. அதனைத் தொடர்ந்து ஜூன் 29ம் தேதி பூமி பூஜை செய்தனர். தற்போது,ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் முழுவதும் கருங்கற்களால் கட்டுமான திருப்பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. அதில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை தினமான இன்று கல்கார வரிசை முதலாவதாக சித்ரவான வரிசைக்கல் துவக்க விழா,திருப்பூர் குமரன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், சென்னை சில்க்ஸ் சிவலிங்கம், காஞ்சி மடத்தின் பிரதிநிதி ஜம்புநாத கனபாடிகள், குளம் காக்கும் அமைப்பின் தலைவர் துரை, ஷைனி ஈஸ்வரன், மெஜஸ்டிக் கந்தசாமி, மோகன், தங்கமுத்து, வெள்ளியங்கிரி, செளந்தரா நிட்ஸ் கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !