உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைகளுக்கு ஹிந்து தர்மத்தை போதிக்க வேண்டும்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி

குழந்தைகளுக்கு ஹிந்து தர்மத்தை போதிக்க வேண்டும்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி

திருப்பூர்: ‘‘தொழில் வளமும், ஆன்மிகமும் பெருகியுள்ள கொங்குமண்ணில், குழந்தைகளுக்கு ஹிந்து தர்மத்தை போதிக்க வேண்டும்,’’ என,  ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், திருப்பூரில் அருளாசி வழங்கினார்.


ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின், 70வது ஜகத்குரு, ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், திருப்பூர் விஜயம் செய்தார். ஷெரீப் காலனி  ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலில், சிறப்பு வழிபாடு நடத்தி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.


சுவாமிகள் வழங்கிய அருளுரை:

ஹிந்து தர்ம வளர்ச்சி தடைபட்டபோது, நமது அருளாளர்கள் தோன்றி, தர்மத்தை காத்தனர். நமது வாழ்க்கை முறை, பக்தி, சேவை, தியாகம், ஆன்மிகத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன. அன்றாட வாழ்க்கை தர்மத்தை ஹிந்து சமுதாயம் கடைபிடித்து வருகிறது. வேதங்களில் கூறியபடி வாழ்ந்தால், நாட்டில் அமைதியும் ஆனந்தமும் பெருகும்.


கோடானு கோடி மக்கள் பின்பற்றும் சமுதாயமாக, ஹிந்து தர்மம் மாறியுள்ளது. வளர்ச்சி என்பது கட்டடம் கட்டுவது மட்டுமல்ல; மனதளவில்  எவ்வளவு உயர்ந்து நிற்கிறோம் என்பதே உண்மையான வளர்ச்சி.  குருகுல கல்வி என்பது, ஓரிடத்தில் தங்கி பயில்வது மட்டுமல்ல. குருவின், ஞானமும், உயர்ந்த குணங்களும் மாணவருக்கு வழங்குவது. அதுவே குருகுலக்கல்வி. குருவின் அருகே இருந்து, வாழ்க்கையை அறிவதே குருகுலம்.


தேசத்தின் பலம் என்பது ஆத்ம பலத்தை உள்ளடக்கியது. ஆத்ம பலம் தான், அனைவருக்குமான பலமாக விளங்குகிறது. கோவில் என்பது கட்டடம் மட்டுமல்ல; பக்தியின் அடையாளம். வேதசாஸ்திரங்கள், புராணங்கள், தேவாரம், நாலாயிர திவ்யபிரபந்தம், திருவாசகம், திருப்புகழ், திருமந்திரம், 18 சித்தர்கள் பாடிய நீதிபோதனை நடக்க வேண்டும். வாழ்க்கை சாராம்சத்தை போதிக்கும் வழிமுறைகளை, குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். தொழில் வளமும், ஆன்மிகமும் பெருகியுள்ள கொங்கு மண்ணில், கலாசார கல்வியும் துவங்க வேண்டும்.


குழந்தைகளுக்கு, விடுமுறை நாட்களில், ஹிந்து தர்மத்தை போதிக்கலாம்.  பக்தி வழியாக ஆன்மிகத்தை வளர்க்கும் கலாசார பயிற்சி வகுப்புகள் அதிகம் நடத்த, தொழில்துறையினர் முன்வர வேண்டும்.  யோகிகள், ஞானிகள், முனிவர்கள்,  மக்கள் மகிழ்வுடன், தர்ம நெறியை பின்பற்றி வாழ வேண்டும் என்றுதான் விரும்பினர்.


அவ்வகையில், மணிப்பூரில் அடுத்த மாதம், ஆயிரம் கலசங்களை கொண்டு சகஸ்ர கலசாபிேஷகம் நடக்க உள்ளது. பொது அமைதிக்காக மணிப்பூரில் இதனை நடத்துகிறோம். ஆன்மிகமும், ஹிந்து தர்மமும் வளர்ச்சி பெற்று, மக்கள் அனைவரும் சிறப்பாக வாழ வேண்டுமென, அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாட்சியை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு, சுவாமிகள் அருளாசி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !