திண்டுக்கல் மாவட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
திண்டுக்கல்: பிரதோஷ நாளான நேற்று, திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் திரளான பொது மக்கள், பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.
திண்டுக்கல்: அபிராமி அம்மன் கோயிலில் ஞானாம்பிகை, காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர், அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை 4:00 மணிக்கு நந்தி, கொடிமரம், காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மன், சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.
ஆர்.எம்.காலனி வி.ஐ.பி., நகர் சொர்ணாம்பிகை உடனுறை குபரேலிங்கேஸ்வரர் கோயிலில் நந்தி, ஸ்ரீகுபேரலிங்கேஸ்வரருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன் கோயில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில், ரயிலடி விநாயகர் கோயில், கூட்டுறவு நகர் விநாயகர் கோயில், பழநி ரோடு பத்திரகாளியம்மன் கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்டாஜலபதி கோயில் லட்சுமி நரசிம்மர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. நாகல்நகர் பாரதிபுரத்தில் உள்ள சாய்பாபா கோயிலில், விபூதி அபிஷேகம், பால் அபிஷேகம், அன்னதானம் நடந்தது.
வடமதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரர் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், எரியோடு சாய் பாபா ஞானலாயம் உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர், பால், வீபூதி உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம்: காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கம், நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை நடந்தது. விருப்பாச்சி தலையூற்று ஸ்ரீநல்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நந்தி, சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஒட்டன்சத்திரம் ரத்தினகிரீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில், பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அஷ்டோத்திர பூஜையுடன், மகா தீபாராதனை நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், சித்தையன்கோட்டை காசி விஸ்வநாதர் கோயிலில், பிரதோஷ வழிபாடு நடந்தது.
பழநி: முருகன் கோயிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி, கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயில், கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில், பாலசமுத்திரம் அமுதீஸ்வரர் கோயில், மதனபுரம் அண்ணாமலை உண்ணாமுலை நாயகி அம்மன் கோயில், அ.கலையம்புத்துார் கல்யாணியம்மன் கைலாசநாதர் கோயில் உட்பட அனைத்து சிவன் கோயில்களிலும் மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. பிரசாதம் வழங்கப்பட்டது.
நத்தம்: கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் ஆடி மாத பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரதோஷத்தை முன்னிட்டு இக்கோயில் நந்தி சிலைக்கு 16 வகையான திரவிய அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தன. தொடர்ந்து மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடந்தது. பின்னர் மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தன. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதைப் போலவே சிறுமலை சிவசக்தி சித்தர் பீடம், அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோயில், காம்பார்பட்டி மாதா புவனேஸ்வரி உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவன் கோயில், கணவாய்ப்பட்டி சிவன் கோயில், குட்டூர் அண்ணாமலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோவிலிலும் பிரதோஷ விழா நடந்தது.