பவுர்ணமி ஆன்மிக நடைபயணம்
வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்டபவுர்ணமி ஆன்மிக நடைபயணம் நேற்று மாலை நடந்தது.
வில்லியனுாரில் பழமைவாய்ந்த திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. அதனை சுற்றி ஆறு சிவாலயங்கள், 18 சித்தர்கள் ஜீவ சமாதிகள் அமைந்துள்ளன. திருவண்ணாமலை கிரிவலம் போன்று, பவுர்ணமி நாளில் திருக்காமீஸ்வரர் கோவிலில் துவங்கி, 12 கிலோ மீட்டர் துார ஆன்மிக நடைபயணத்தை பக்தர்கள் மேற்கொள்கின்றனர்.
அதன்படி, நேற்று மாலை 6:00 மணியளவில் 55வது மாத ஆன்மிக நடைபயணத்தை ரவிக்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.நான்குமாட வீதிகளில் உள்ள அம்மன், விநாயகர், தென்கலை வரதராஜபெருமாள் கோவில்களில் வழிபட்டனர். பின், அனந்தம்மாள் மடம் ஆஞ்சநேயர், ஏகாம்பர ஈஸ்வரன் கோவில், மூலக்கடை பாடல் பெற்ற வினாயகர் கோவில், ராமபரதேசி சித்தர் பீடம்,வி.தட்டாஞ்சாவடி தேங்காய்சுவாமி சீத்தர் பீடம், வி.மணவெளி, ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு வழியாக காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் முடித்து,திருக்காஞ்சி கெங்கைகாவராக நதீஸ்வரர் கோவில், உறுவையாறு சாய்பாபா கோவில், கோட்டைமேடு வழியாக மீண்டும் திருக்காமீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது.
புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள், சிவனடியார்கள் மற்றும் சிவாச்சார்யர்கள்வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் பவுர்ணமி ஆன்மிக நடைபயணத்தில் கலந்துகொண்டனர்.