பல்லடத்தில் பாரம்பரியத்தை பின்பற்றும் பெண்கள்; அம்மனுக்கு சீர் எடுத்து வழிபாடு!
பல்லடம்: பல்லடத்தில், பாரம்பரியத்தை பின்பற்றி, பெண்கள், தாய்மார்கள் உள்ளிட்டோர், மாரியம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்து வழிபட்டனர்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இம்மாதத்தில், பெண்கள், தாய்மார்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஆடி மாத ஐந்தாவது வெள்ளிக்கிழமையான இன்று பல்லடம், பனப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள், தாய்மார்கள் உள்ளிட்டோர், பாரம்பரியத்தை பின்பற்றி, சீர் வரிசைகள் எடுத்து வந்து மாரியம்மனை வழிபட்டனர்.
இது குறித்து பெண்கள் கூறியதாவது:; ஒவ்வொரு ஆடி மாதமும், ஆடிப்பூர நாளில், அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். முன்னோர்கள் அறிவுறுத்தியதன்படி, இச்சடங்குகளை செய்து வருகிறோம். முன்னதாக, ஒவ்வொரு வீட்டில் இருந்தும், அவரவர் விருப்பப்படி, பெண்கள், தங்களால் இயன்ற சீர்வரிசைகளை எடுத்து வருவார்கள். எல்லையில் உள்ள நாட்டாங்கல்லின் முன்பாக சீர்வரிசைகளை வைத்து வழிபடுவோம். ஆடி மாதம் கன்னி தெய்வங்களுக்கு உகந்த மாதம் என்பதால், கன்னி தெய்வங்களை போற்றும் வகையில், ஏழு பெண் குழந்தைகளை தெய்வங்களாக பாவித்து, வழிபாட்டுக்கு அழைத்துச் செல்வோம். நாட்ராயன் கல்லுக்கு பூஜை செய்த பின், சீர் வரிசைகளுடன் இங்குள்ள பெருமாள் கோவிலுக்கு செல்வோம். அங்கு, பெருமாளை வழிபட்ட பின், மாரியம்மனுக்கு சீர்வரிசைகள் வழங்கப்படும் என்றனர். முன்னதாக, மஞ்சள், குங்குமம், வளையல், புடவை, தானியங்கள், இனிப்பு, வெற்றிலை, பாக்கு, பழம் என, பல்வேறு சீர்வரிசைகள் மாரியம்மனுக்கு வழங்கப்பட்டன. அபிஷேக பூஜைகளை தொடர்ந்து, வளையல் அலங்காரத்தில் பனப்பாளையம் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.