கலுங்கடி தர்ம முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா
மானாமதுரை; மானாமதுரை அருகே ஆலம்பச்சேரி கிராமத்தில் கலுங்கடி தர்ம முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆலம்பச்சேரி கிராமத்தில் கண்மாய் கரையை ஒட்டியுள்ள கலுங்கடி தர்ம முனனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக கடந்த சில மாதங்களாக நடைபெற்ற திருப்பணிகள் முடிவு பெற்றதை அடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகியது.இதனைத் தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், ரக்ஷாபந்தனம் உள்ளிட்ட பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.நேற்று காலை யாகசாலை பூஜைகள் முடிவு பெற்று பூர்ணாகுதி நடைபெற்றதும் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் மேள,தாளங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக,ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானமும் கோயில் முன்பாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஆலம்பச்சேரி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலம்பச்சேரி கிராம மக்கள் செய்திருந்தனர்.