குமரன் குன்று கோவிலில் கும்பாபிஷேக வேள்வி பூஜை துவக்கம்
மேட்டுப்பாளையம்: குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசுவாமி கோவிலில், இன்று கும்பாபிஷேக விழாவில், முதல்கால வேள்வி பூஜை துவங்குகிறது.
மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை, குமரன் குன்றில் கல்யாண சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில், முருகப்பெருமான் திருமணக் கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்த வருகிறார். இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து, நேற்று மாலை திருவிளக்கு ஒளியேற்றி, புனித நீரை புனித நீரால் ஆகுமே யாகசாலையை சுத்தம் செய்தும் பிள்ளையார் வழிபாடு பூஜையும் நடந்தது. இன்று கும்பாபிஷேக விழாவின் முதல்கால வேள்வி பூஜை துவங்குகிறது.
இது குறித்து திருப்பணிக்குழு தலைவர் பழனிசாமி, அறங்காவலர் குழு தலைவர் செல்வகுமார், அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், பழனிசாமி, சரோஜினி, ராமச்சந்திரன், செயல் அலுவலர் சபரீஸ்வரி ஆகியோர் கூறியதாவது: குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா துவங்கியது. யாக வேள்வி பூஜைக்கு, 60 அடி நீளம், 40 அடி அகலத்தில், பெரிய யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் யாக சாலையை சுற்றி வர, 5 அடிக்கு சுற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. யாக சாலையின் உள்ளே மூன்று வேதிகைகள், ஆறு பரிவார் மேடைகள், 21 யாகக் குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலையில் பிள்ளையார் வழிபாடு நடைபெற உள்ளது. மதியம் தீர்த்த குடங்கள், முளைப்பாளிகைகளை ஊர்வலமாக எடுத்து வருகின்றனர். மாலை 6 மணிக்கு, 108 மூலிகைகளால் முதல் கால வேள்வி பூஜையும், பேரொளி வழிபாடும் நடைபெற உள்ளது.
26ம் தேதி காலை விமானங்களில் கலசம் நிறுவும் பணிகளும், அதைத் தொடர்ந்து இரண்டாம் கால வேள்வி பூஜையும், மதியம் தெய்வ திருமேனிகளுக்கு எண் வகை மருந்து சாற்றுதலும், மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடைபெற உள்ளது. 27ம் தேதி காலை, நான்காம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது. பின்பு காலை, 8:30 மணிக்கு யாகசாலையிலிருந்து தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி வலம் வந்து, விமான கலசங்களுக்கும், மூலவருக்கும், பரிவார் தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்த உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
விழா ஏற்பாடுகள் குறித்து மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., பாஸ்கர், காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் ஆகியோர் கோவிலில் நடைபெறும் திருப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது டி.எஸ்.பி., கூறுகையில், வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், நிறுத்துவதற்கு இடவசதி செய்து தர வேண்டும். கோவிலில் மேல் தளத்தில் மிகவும் குறைவான பக்தர்களை ஏற்ற வேண்டும். அன்னதானம் வழங்கும் இடத்தில் பக்தர்களை வரிசைப்படுத்த வேண்டும். போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு, கோவில் விழா குழுவினரும், பக்தர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்றார்.