குப்பேபாளையம் கூரை பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
தொண்டாமுத்தூர்; குப்பேபாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத கூரைப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
குப்பேபாளையத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத கூரைப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில், 22ம் தேதி, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. அதேபோல, இக்கோயிலில், புதியதாக கட்டப்பட்ட மாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவும் துவங்கியது. நேற்று, காலை, 5:30 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால ஹோமம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு யாகசாலை மண்டபத்தில் இருந்து புனித கலசங்கள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, காலை, 9:50 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, அரசமர விநாயகர், மாகாளியம்மன், ஸ்ரீதேவி பூதேவி சமேத கூரைப்பெருமாள் மற்றும் கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.