மதுரையில் சொக்கனுக்கு தொடர்ந்து சோதனை; ஆவணி மூலவீதிகளில் 2 நாட்கள் வீதிஉலா ரத்து
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேக்கம் காரணமாக ஆவணிமூல வீதியில் 2 நாட்களாக அம்மன், சுவாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டது.
இக்கோயில் ஆவணி மூலத்திருவிழா ஆக.9ல் துவங்கி இன்று (ஆக.27) வரை நடக்கிறது. இதில் தினமும் சுவாமியின் திருவிளையாடல்களை நடத்திக்காட்டும் உற்ஸவம் நடக்கிறது. ஆவணித் திருவிழா என்பதால் அம்மனும், சுவாமியும் தினமும் காலை, மாலையில் ஆவணி வீதிகளில் வலம் வருவர். நேற்று முன்தினம் வளையல் விற்ற லீலை நடந்தது. மாலையில் உலா வந்தபோது வடக்காவணி மூலவீதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடந்தது. அதைக் கடந்து அம்மன், சுவாமி வாகனங்கள் செல்லும் நிலை உருவானது. புனிதம் கருதி அந்த வீதியில் உலா ரத்து செய்யப்பட்டு வடக்கு சித்திரை வீதி வழியாக அம்மன், சுவாமி அழைத்து வரப்பட்டனர். திருவிழாவின் 11ம் நாளான நேற்று சட்டத்தேர் உற்ஸவம். காலையில் ஆவணி மூலவீதிகளில் உலா துவங்கியது. வடக்காவணி –, கீழ ஆவணி மூல வீதி சந்திப்பு அருகே பாதாள சாக்கடை நீர் தேங்கி கிடந்தது. இதனால் நேற்றும் ஆவணி மூலவீதிகளில் உலா ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக சொக்கப்பர் நாயக்கர் தெரு, தெற்கு சித்திரை வீதி வழியாக வீதி உலா நடந்தது. ஆவணி மூலத் திருவிழாவில் 2 நாட்களாக அம்மன், சுவாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டது பக்தர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. மாநகராட்சி தரப்பில் கேட்டபோது, ‘அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு பாதாள சாக்கடை பிரச்னைகளை சரிசெய்கிறோம். கோயில் அருகே தளவாய் அக்ரஹாரம் பகுதியில் பணிகள் நடக்கின்றன. இதனால் வடக்கு ஆவணி மூலவீதியில் கழிவுநீர் தேங்கியது. இதற்கு விரைவில் தீர்வு காணப்படும்’ என்றனர்.