உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு: பேரூர் ஆதினம் வலியுறுத்தல்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு: பேரூர் ஆதினம் வலியுறுத்தல்

பேரூர்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் வலியுறுத்தியுள்ளார்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், செப்., 17ல் நடக்கிறது. இதற்காக, கோவிலில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கோவிலில், பல்வேறு தரப்பினர்களும், தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்,பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரும் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என, வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,உலக மக்களுக்கு வழிகாட்டும் செந்நெறியாக திகழ்வது தமிழ் மொழி. தொல்காப்பியர் முதல் இந்நாள் இலக்கிய பெரியோர்கள் அனைவரும் போற்றிப்பரவி பயன்பாட்டில் இருந்து வந்த தமிழ்மொழி, இடைக்காலத்தில் வழிபாட்டுத்துறையில் தொய்வை நோக்கி நகர்ந்து வருகிறது. தமிழக கோவில்களில், திருக்குடமுழுக்கு நன்னீராட்டின் போது, சமஸ்கிருதத்திற்கு இணையாக, தமிழில் வேள்விகள் நடத்தப்பட வேண்டும் என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஆனால், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், குடமுழுக்கின் போது, தமிழில் வேள்வி நடத்த, கோவில் நிர்வாகத்திடம் தமிழ் வேள்வி ஆசிரியர்கள் அனுமதி கேட்டுள்ளனர். அதற்கு, இதுவரை கோவில் நிர்வாகம் பதில் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து, சண்டிகேஸ்வரர் நற்பணி மன்றத்தின் தலைவர் சுரேஷ்பாபு என்பவர், தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இவ்வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முத்தமிழ் சங்கம் வளர்த்த மதுரை மண்ணில், மீனாட்சி அம்மன் கோவிலில், தமிழ் வேள்வி ஆசிரியர்களை கொண்டு குடமுழுக்கு நடத்த வேண்டும் என, தமிழக அரசையும், உயர் நீதிமன்றத்தையும் கேட்டுக்கொள்கிறோம்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !