உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இமயமலையில் பேரிடர்களை எதிர்கொள்ள அனைத்து நாடுகள் கொண்ட அமைப்பை உருவாக்க சத்குரு கோரிக்கை

இமயமலையில் பேரிடர்களை எதிர்கொள்ள அனைத்து நாடுகள் கொண்ட அமைப்பை உருவாக்க சத்குரு கோரிக்கை

தொண்டாமுத்தூர்: நேபாளில் நடந்த நிகழ்ச்சியில், இமயமலை தொடர்கள் பரவியுள்ள அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பை உடனடியாக உருவாக்க வேண்டும் என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கோரிக்கை வைத்துள்ளார்.


நேபாள நாட்டில் உள்ள காத்மாண்டு நகரில், நேபாளத்திற்கு துணை நிற்போம் என்ற நிகழ்ச்சி நடந்தது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கலந்துகொண்டார். முன்னதாக, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், நடிகை மனிஷா கொய்ராலா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசுகையில்,"இமயமலை தொடர்கள் பரவியுள்ள அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பு உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். அரசியல் நிர்வாகங்கள் தனித்தனியாக இருந்தாலும், இந்த மலைத்தொடர்கள் எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாக பார்க்கப்பட வேண்டும். இதை நாம் செய்யாமல், சரி, இது நேபாளத்தின் பிரச்சனை, அவர்களே பார்த்து கொள்ளட்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தால் இதற்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது.


மலைகளுக்கு உங்களது அரசியல் தொடர்புகள் தெரியாது. நீங்கள் பேசும் மொழியோ அல்லது செய்யும் அபத்தமான காரியங்களோ தெரியாது. இதை ஒரே அமைப்பாக உங்களால் நிர்வகிக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் கலந்தாலோசனை செய்வதாவது ஒரே அமைப்பாக நடக்க வேண்டும். நாம் செய்யும் செயல்களில் ஒரு ஒத்திசைவு இருக்க வேண்டும். ஏனெனில், இமயமலை பூமியின் மிகவும் அற்புதமான மற்றும் கம்பீரமான அமைப்பாகும். அதே நேரத்தில், அது மிக உறுதியானதும் அல்ல. ஒரு பெரிய பனிப்பாறையின், முக்கால்வாசி பகுதி, சிகரத்தில் இருந்து, 4,000 அடி கீழே திடீரென விழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்போது எது நடந்து விட்டது என்பதால், நேபாளம் போன்ற ஒரு சிறிய நாடு தனியாக இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது என்பதை நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். இந்த பேரழிவிற்கு, தெய்வீக காரணங்களை கூறுவதோ அல்லது நம்ப முடியாத மாய சக்தி என்று சித்தரிக்கவோ வேண்டாம். வாழ்க்கையின் ஆன்மிக பரிமாணங்களுக்கும், இயற்கை நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் பௌதிக விதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்வது அவசியம். எனவே தத்துவங்கள், கருத்தியல்கள் அல்லது ஆன்மிக விளக்கங்களை அளித்து மனித துயரத்தை நாம் கொச்சைப்படுத்த கூடாது. மிகப்பெரும் பேரிடரை சந்தித்திருக்கும் நேபாளத்திற்கு உதவும் வகையில், நேபாள பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு, ஈஷா அறக்கட்டளை சார்பில், ஒரு கோடி வழங்கப்படும். மேலும், கோவை ஈஷா யோகா மையத்தில், நேபாள பெரு வெள்ள பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்காக கால பைரவ கர்மா செய்யப்படும்,"என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !