பைரவரின் வாகனமான நாய்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் டவுனில் இருந்து கட்டி சுப்பிரமணியா கோவிலுக்கு செல்லும் வழியில் கெட்டேனஹள்ளி கிராமம் அமைந்துள்ளது. இங்கு கால பைரவர் கோவில் உள்ளது. உள்ளூர் மக்களால் மட்டுமே அறியப்பட்டு இருக்கும் இந்த சக்தி வாய்ந்த கோவிலை பற்றி, பெங்களூரு நகர மக்களுக்கு தெரிவது இல்லை.
இக்கோவிலில் உள்ள சிறிய குன்றின் மீது, இயற்கையாக அமைந்துள்ள பாறை இடுக்கில் கால பைரவர் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். செய்வினை கோளாறுகள், பில்லி சூனியம், தீராத மன பயம், எதிரிகள் தொல்லையால் அவதிப்படுவோர் இக்கோவிலுக்கு வந்து பைரவரை வணங்கி சென்றால் உடனடி விமோசனம் கிடைக்கும் என்பது, பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தோறும் ராகுகால நேரத்தில் இங்கு நடக்கும் விசேஷ பூஜைகள் சக்தி வாய்ந்தவை. பக்தர்கள், தங்கள் கஷ்டங்கள் நீங்க மிளகை சிறிய துணியில் மூட்டையாக கட்டி, அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுகின்றனர். பைரவரின் உக்கிரத்தை தணிக்க வடை மாலை சாத்தியும் பக்தர்கள் வழிபடுகின்றனர். பைரவரை தவிர விநாயகர், நாகர் சிலைகள், ஹனுமன் விக்ரகங்களும் உள்ளன. பைரவரின் வாகனமான நாய்கள், கோவிலை சுற்றி நிறைய காணப்படுகின்றன. இங்கு வரும் பக்தர்கள் நாய்களுக்கு பிஸ்கட் அல்லது உணவு வழங்கியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சிறிய மலை மீது அமைந்து இருப்பதால் 80 படிக்கட்டுகள் ஏறி கோவிலுக்கு செல்ல வேண்டும். திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் கா லை 8:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும்; செவ்வாய், வெள்ளியில் காலை 8:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், மாலை 4:30 மணி முதல் இரவு 7:00 மணி வரையும்; ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் தொடர்ச்சியாக திறந்திருக்கும்.