உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவக்கிரக கோவிலில் முப்பெரும் விழா முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு

நவக்கிரக கோவிலில் முப்பெரும் விழா முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு

புதுச்சேரி: அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில், மொரட்டாண்டி நவக்கிரக கோவிலில், முப்பெரும் விழா மற்றும் 20ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வரும் 20ம் தேதி நடக்கிறது.

விழாவையொட்டி, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் அகில இந்திய தலைவர் திருநள்ளாறு ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார், புதுச்சேரி மாநில செயலாளர் அர்த்தநாரி சிவாச்சாரியார் ஆகியோர், முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பிதழ் வழங்கி, அழைப்பு விடுத்தனர்.

முப்பெரும் விழா வரும் 20ம் தேதி காலை 9:00 மணி முதல் 1:00 மணி வரையிலும், மதியம் 2:00 மணி முதல் 6:00 வரை 20ம் ஆண்டு பொதுக்குழு கூட்டமும் நடக்கிறது.

விழாவில், திருநள்ளாறு ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமை தாங்குகிறார். சோமசுந்தரம் தீக்ஷித், சிவசங்கர சர்மா சீதாராம சிவாச்சாரியார், முத்துக்குமார சிவாச்சாரியார் மற்றும் சங்கத்தின் நிறுவனர் கணேச சிவம் முன்னிலை வகிக்கின்றனர்.

முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் ராஜசேகரன் ஆகியோர் 60 வயது நிறைவு செய்த மூத்த சிவாச்சாரியார்களுக்கு ‘சிவ கைங்கரிய சூடாமணி’ எனும் விருதினை வழங்க உள்ளனர். சிதம்பர சிவாச்சாரியார் சிலையை, மஹா சதாசிவ பீடாதிபதி சுவாமிநாத சுவாமிகள் திறந்து வைத்து ஆசி வழங்குகிறார். கூனம்பட்டி ஆதீனம் ராஜ சரவணா மாணிக்க வாசக சுவாமிகள், கீதா சங்கர சிவாச்சாரியார், கீதா ராமசிவாச்சாரியார் ஆகியோரால் தொகுத்து எழுதியுள்ள நவக்கிரக பூஜா ஆராதனா சாந்தி பரிகாரங்கள் புத்தகம் வெளியிடப்படுகிறது.

முதல் பிரதியை புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் மற்றும் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வள்ளியப்பன் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார், திருப்பரங்குன்றம் ராஜா பட்டார், கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமிகள், பெங்களூரு சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார், துாத்துக்குடி செல்வம் பட்டர், வேலுார் அம்மா பிரசாத் துர்கா சுவாமிகள், திருவண்ணாமலை பெரிய பட்டம் டாக்டர் ரமேஷ் சிவாச்சாரியார், ஞான துாதன் இதழ் ஆசிரியர் தேவானூர் ரமேஷ் சுவாமிநாத சிவாச்சாரியார் உள்ளிட்ட பாடசாலை முதல்வர்கள், அகில இந்திய நிர்வாகிகள், தமிழ் மாநில, மாவட்ட, பிற மாநில சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், சிவாச்சாரியார்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

ஏற்பாடுகளை தமிழ் மாநில தலைவர் கீர்த்திவாசன் சிவாச்சாரியார் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், பிற மாநில பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !