பட்டினப்பாக்கம், நீலாங்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்க தடை
சென்னை: ‘சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம், நீலாங்கரை பகுதிகளில் அனுமதிக்காமல் பிற இடங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையில் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர், எண்ணுார் ஆகிய கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க, அரசு ஒதுக்கி உள்ளது. இந்த இடங்களில் எந்த அமைப்பினர், எப்போது சிலைகளை கரைக்கலாம் என்பது, காவல் துறை வாயிலாக முடிவு செய்யப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதால் மாசு ஏற்படுகிறது எனக்கூறியும், அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதை தடுக்க உத்தரவிடக்கோரியும், சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர், தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், 2023ல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, வல்லுநர் குழு உறுப்பினர் பிரசாந்த் கார்கவா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பாக, கலெக்டர்கள், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில், அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. சென்னையில் ஆறு இடங்கள் விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பட்டினப்பாக்கம், நீலாங்கரை ஆகியவை, கடலோர ஒழுங்குமுறை மண்டல முதல் நிலையில் வருகின்றன.
இந்த இடங்கள், சிலைகள் கரைப்பதற்கு அனுமதிக்கத்தக்கவை அல்ல. எனவே, இங்கு ஊர்வலமாக கொண்டு வரப்படும் விநாயகர் சிலைகளை, வேறு நான்கு இடங்களுக்கு திருப்பி விட, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில், அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். கடலில் சிலைகளை கரைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து, பொதுமக்களுக்கு புரிதலை ஏற்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக உரிய கூட்டம் நடத்தி, அதில் எடுக்கப்படும் முடிவுகளை தீர்ப்பாயத்துக்கு வரும் 16ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். அன்று மீண்டும் வழக்கு விசாரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.