ADDED : மார் 26, 2025 09:08 AM

புதிய நிதியாண்டு துவங்கும் நிலையில், ஏப்ரல் 1 முதல் பயணியர் கார்களின் விலை 2 முதல் 4 சதவீதம் வரை உயர உள்ளன. அதாவது, எட்டு கார் நிறுவனங்கள் விலை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
மாருதி நிறுவனம் 4 சதவீதமும், மஹிந்திரா, ஹூண்டாய், கியா, பி.எம்.டபிள்யூ., ஆகிய நிறுவனங்கள் 3 சதவீதமும், ரெனோ 2 சதவீதமும் விலை உயர்த்த உள்ளன. ஹோண்டா மற்றும் டாடா நிறுவனங்கள், விலை உயர்வு சதவீதம் குறித்த தகவலை வெளியிடவில்லை.
கார் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இதர அம்சங்களின் விலை உயர்வு இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏற்றம் இல்லாத ஸ்டீல் விலை, குறைந்த கச்சா எண்ணெய் விலை ஆகியவை இருந்தாலும், நாணய ஏற்ற இறக்கங்கள் மற்றும் உயரும் பணியாளர் செலவுகள் ஆகியவை கார் உற்பத்தியாளர்களை பாதித்துள்ளன.
கடந்த ஒன்பது மாதங்களாக, இந்நிறுவனங்களின் லாபத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத காரணத்தால், கார் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தாமதித்தால், லாபம் குறையும் வாய்ப்பு உள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, இருசக்கர வாகன நிறுவனங்களான பஜாஜ், ஹீரோ உள்ளிட்ட நிறுவனங்கள், 1 - 2 சதவீதம் வரை விலை உயர்த்த இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், நடுத்தர மக்களுக்கான வரி சலுகை, புதிய அறிமுகங்கள் ஆகியவை வாகனத் தேவையை அதிகரித்து, நிலையான சந்தையை ஏற்படுத்தும் என, வாகனத் துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.