ADDED : மார் 26, 2025 09:03 AM

வரும் நிதியாண்டில், 15 - 20 சதவீத விற்பனை வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக ஜப்பானை சேர்ந்த கட்டுமான இயந்திர நிறுவனமான 'கொபெல்கோ இந்தியா' நிறுவனத்தின் விற்பனை மற்றும் விற்பனைக்கு பின் சேவைகள் பிரிவு இயக்குனர் மோசஸ் எடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இந்நிறுவனம், 20,000 எக்ஸ்கவேட்டர்களை உற்பத்தி செய்து, புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. இந்நிலையில், தினமலர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது:
இந்தியாவை பொறுத்த வரை, 8 டன் முதல் 85 டன் வரையிலான எக்ஸ்கவேட்டர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எரிவாயு செலவை குறைக்கும் தொழில்நுட்பங்களை இந்திய சந்தைக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம். குறிப்பாக, ஹைபிரிட் எக்ஸ்கவேட்டர்கள் ஜப்பானில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சுற்றுச்சூழலை பாதிக்காமல், எரிவாயு செலவை குறைக்கும் கடுமையான விதிமுறைகள் மற்றும் வர்த்தக சூழல் அமையும் நிலையில், இந்த தொழில்நுட்பம் இங்கு அறிமுகப்படுத்தப்படும்.
கடந்த ஆண்டில், 8 டன் எடை பிரிவில் அறிமுகமான 'லிட்டில் மாஸ்டர்' என்ற 'எஸ்.கே., 80' எக்ஸ்கவேட்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது, 45 எக்ஸ்கவேட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
எங்கள் உற்பத்தியில், சராசரியாக 48 - 50 சதவீதம் வரை உள்நாட்டு மயமாக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, எஸ்.கே., - 80 எக்ஸ்கவேட்டர் உற்பத்தியில் 70 சதவீதம் வரை உள்நாட்டு மயமாக்கப்பட்டுள்ளது. இதர உற்பத்திகளில், இந்த இலக்கை எட்ட முயற்சி செய்கிறோம்.
கடந்த ஆண்டில், 75 கோடி ரூபாய் முதலீடு செய்து, ஆலையை விரிவுபடுத்தி உள்ளோம். இது, ஆண்டுக்கு, 2,400 ஆக இருந்த உற்பத்தி திறனை, தற்போது, 3,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டில், 2,000த்திற்கு அதிகமான எக்ஸ்கவேட்டர்களை விற்பனை செய்துள்ளோம். இதில், 1,700 எக்ஸ்கவேட்டர்கள் உள்நாட்டிலும், 300க்கும் அதிகமான எக்ஸ்கவேட்டர்கள் வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு ஆப்ரிக்கா, நேப்பாளம், பூட்டான், வங்கதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் உட்பட 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம்.
ரயில் வாயிலாக வினியோகம் துவங்கியதன் காரணமாக, செலவுகள் குறைந்துள்ளன. வரும் நிதியாண்டில், புதிய மாடல் எக்ஸ்கவேட்டர்களை அதிகப்படுத்தி, 15 - 20 சதவீத விற்பனை வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 2007 முதல் இந்நிறுவனம் இயங்கி வருகிறது. முதல் நான்கு ஆண்டுகள், ஜப்பானில் இருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டன. 2011ல், சென்னை அருகில் ஆந்திராவின் ஸ்ரீசிட்டி பகுதியில் ஆலை அமைக்கப்பட்டது.
முதல் 8 ஆண்டுகளில், முதல் 10,000 இயந்திரங்களையும், அடுத்த 6 ஆண்டுகளில் அடுத்த 10,000 இயந்திரங்களையும் உற்பத்தி செய்துள்ளது இந்நிறுவனம்.