/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
அடுக்குமாடி கட்டடங்களில் அடித்தளத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
/
அடுக்குமாடி கட்டடங்களில் அடித்தளத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
அடுக்குமாடி கட்டடங்களில் அடித்தளத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
அடுக்குமாடி கட்டடங்களில் அடித்தளத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
ADDED : மே 18, 2025 07:10 AM
தமிழகத்தில் தற்போதைய நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை தவிர்க்க முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள துவங்கியுள்ளனர். ஆனால், அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்கும் விஷயத்தில் தேவையான விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக காணப்படுகிறது.
தனி வீடு வாங்க முடியாத நிலையில் அடுக்குமாடி திட்டத்தில் வீடு வாங்க வேண்டும் என்று முடிவு எடுக்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை பட்டியலிட வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில், அதிக வீடுகள் உள்ள திட்டமா அல்லது குறைந்த எண்ணிக்கையில் உள்ள வீடா என்பதை கவனமாக பார்த்து முடிவு செய்ய வேண்டும்.
அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்கும் பொது மக்கள் பெரும்பாலும் கட்டடத்தின் அடிப்படை உறுதி தன்மை தொடர்பான விஷயங்களை விசாரிப்பது இல்லை. அந்த திட்டத்தில், நமக்கு முன் இவ்வளவு பேர் வீடு வாங்கி உள்ளனர், அவர்களுக்கு தெரியாத விஷயத்தையா நாம் கண்டுபிடிக்க போகிறோம் என்று நினைக்கின்றனர்.
இவ்வாறு தான் ஒவ்வொருவரும் நினைப்பதால், யாரும் கட்டடத்தின் உறுதி தன்மை விஷயங்களை விசாரிக்காமல் விட்டுவிடுகின்றனர். முறையான அனுமதி பெறப்பட்டதற்கான கட்டட வரைபடம் உள்ளது, அதில் குறிப்பிட்டபடி தான் கட்டடம் கட்டப்பட்டு இருக்கும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
குறிப்பாக, பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் மக்கள் ஆய்வு செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி என்று, எதை பற்றியும் கவலைப்படாமல் தரமான அடித்தளம் அமைப்பதில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், வீடு வாங்கும் மக்கள் ஒருவர் கூட அடித்தளத்தின் ஆழம் என்ன, அதில் பயன்படுத்தப்பட்ட கம்பி என்ன, கான்கிரீட் என்ன என்பதை விசாரிப்பது இல்லை.
நீங்கள் வீடு வாங்கும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில், ஏற்கனவே பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டது என்பதால், எதையும் விசாரிக்க வேண்டாம் என்பது பொருளல்ல. ஒரு குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு வாங்கும்போது அதன் ஒவ்வொரு பாகத்துக்கான தரம் குறித்து விசாரிப்பது அவசியம்.
வீட்டுக்கடன் கொடுக்கும் வங்கி அதிகாரிகள் விசாரிப்பார்கள், நமக்கு முன் வீடு வாங்கியவர்கள் விசாரித்து இருப்பார்கள் என்ற பொதுவான எண்ணத்தின் அடிப்படையில் செயல்படக் கூடாது. நீங்கள் பெரிய அளவிலான தொகையை அதில் வங்கிக்கடன் வாயிலாக முதலீடு செய்யும் நிலையில் தரம் சார்ந்த விஷயங்களை விசாரிப்பது அவசியம்.
கட்டடத்தின் தரத்தை விசாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அது சார்ந்த தொழில்நுட்ப விஷயங்கள் எனக்கு தெரியாது என்று பலரும் அமைதியாகிவிடுகின்றனர். இது போன்ற சூழலில், உங்களுக்கு தெரிந்த கட்டுமான பொறியாளர் அல்லது கட்டட அமைப்பியல் பொறியாளர் வாயிலாக தரம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.
இதற்கு ஏற்படும் சிறிய செலவுகளை பெரிதாக நினைக்காமல் உண்மை நிலவரத்தை அறிய மக்கள் முன்வர வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை பொறியாளர்கள்.