/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
வீடு பராமரிப்பு
/
24 டிகிரி செல்சியஸ் போதும்... மின்சாரத்தை உறிஞ்சாது 'ஏ.சி.,'
/
24 டிகிரி செல்சியஸ் போதும்... மின்சாரத்தை உறிஞ்சாது 'ஏ.சி.,'
24 டிகிரி செல்சியஸ் போதும்... மின்சாரத்தை உறிஞ்சாது 'ஏ.சி.,'
24 டிகிரி செல்சியஸ் போதும்... மின்சாரத்தை உறிஞ்சாது 'ஏ.சி.,'
ADDED : ஜூன் 13, 2025 11:05 PM

''மின் கட்டணம் அதிகரித்துவிட்ட நிலையில், வீடு, அலுவலகங்களில் ஏ.சி., பயன்படுத்துவோர், 24 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வைக்க வேண்டும்'' என, எரிசக்தி திறன் மேம்பாட்டு அலுவலகம் (பி.இ.இ.,) யோசனை தெரிவித்துள்ளது.
ஆண்டு முழுக்க கோடையின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. மின் விசிறி இல்லாத வீடுகளே இருக்க முடியாது; குளிர்சாதனப்( 'ஏ.சி.,') பயன்பாடும் பெருமளவில் இருக்கிறது. பொதுவாக, கோடையின் தாக்கம் ஏப்., --- மே மாதங்களில் தான் அதிகமாக இருக்கும்; அப்போதுதான் மின்விசிறி, ஏசி., பயன்பாடு அதிகளவில் இருக்கும்.ஆனால், சமீப ஆண்டுகளாக, ஜூன் மாதம் கூட வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருக்கிறது. இதனால், 'ஏ.சி.,) மின்விசிறி பயன்பாடு அதிகரிக்க துவங்கியிருக்கிறது; மின் கட்டணம் கையை கடிக்கிறது என, மக்கள் புலம்புகின்றனர்.
'வெயில் அதிகமாக இருப்பதால் பலரும் தங்கள் ஏ.சி.,யில் வெப்ப அளவை, 16 முதல், 21 டிகிரி செல்சியஸில் வைக்கின்றனர். இதை, 24 டிகிரியில் வைத்தால் மின் உபயோகம் குறைந்து; மின் கட்டணம் குறையும்' என எரிசக்தி திறன் மேம்பாட்டு அலுவலகம் (பி.இ.இ.,) தெரிவித்துள்ளது.
ரூ.5,000 கோடி சேமிக்கலாம்
'ஏ.சி.,யில் ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை அதிகரிக்கும் போதும், நம்மால், 6 சதவீதம் மின்சார பயன்பாட்டை குறைக்க முடியும். ஏ.சி.யில், 24 டிகிரி முதல், 25 டிகிரி வெப்பநிலை வைத்தாலே, அறை குளிர்ச்சியாக இருக்கும். வெப்பநிலை அளவை குறைக்க, குறைக்க மின்சார உபயோகம் அதிகரிக்கும். நம் நாட்டில் ஏ.சி. பயன்படுத்துவோரில் 50 சதவீதம் பேர், 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவை பின்பற்றினால், ஆண்டுக்கு, 1,000 கோடி யூனிட் மின்சாரம் சேமிக்க முடியும். இது, 5,000 கோடி ரூபாய் அளவுக்கு சேமிக்க முடியும். ஆண்டுக்கு, 8.2 மில்லியன் டன் அளவுக்கு கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தையும் குறைக்க முடியும்' எனவும் பி.இ.இ., தெரிவித்துள்ளது.
ஏ.சி., பயன்பாடு குறித்த பி.இ.இ.,யின் யோசனை சரியானது; மக்கள் அதை ஏற்க வேண்டும். ஏ.சி.,யில், 16 முதல், 20 டிகிரி செல்சியஸ் வைத்து பழக்கப்பட்டவர்கள், 24 டிகிரி செல்சியசுக்கு மாறுவதென்பது கடினமானது தான். எனவே, ஏ.சி.,யை, 24 டிகிரி செல்சியசில் வைத்து, மின் விசிறியை, குறைந்த வேகத்தில் சுழல விடுவதன் வாயிலாக, ஏ.சி., காற்று, அறை முழுக்க சுழன்று, குளிர்ச்சியூட்டும்; மின்கட்டணமும் குறையும்.
ஏ.சி.,யில் 'ஸ்லீப்பர் டைம்' வைத்துக் கொள்வதும் மின் செலவை குறைக்கும். ஆங்கிலேயர் காலத்தில், மின்விசிறி தயாரிக்கும் போதே, குறைந்தபட்ச வெப்பநிலை, 16 டிகிரி என்ற அளவிலேயே தயாரித்து விட்டனர்; இதையே மக்களும் பழகிவிட்டனர். மனிதனின் உடல் வெப்பநிலை, 37 டிகிரி செல்சியஸ்; இதற்கு, ஏ.சி.,யின் 24 டிகிரி செல்சியஸ் குளிர்விப்பு போதுமானது; இதற்கு மக்கள் பழக்கப்பட வேண்டும்.
அதே நேரம், 35 முதல், 40 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் வெளியில் அலைந்து விட்டு, 16 டிகிரி ஏ.சி., காற்று சுழலும் அறைக்குள் நுழையும் போது, சட்டென, உடல் குளிர்விக்கப்படுவது, மருத்துவ ரீதியாகவும் உடல் நலனுக்கு நல்லதல்ல என்பதையும் உணர வேண்டும்.தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள பி.எல்.டி.சி., வகை மின்விசிறிகள், மின் சிக்கனத்துக்கு பெரிதும் துணை புரிகின்றன. பழைய மின் விசிறிகளால், 60 முதல், 70 வாட்ஸ் மின்சாரம் செலவாகிறது எனில், பி.எல்.டி.சி., வகை மின் விசிறிகள், 30 வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே எடுத்துக் கொள்கிறது. மின் விசிறி தயாரிப்பின் போதே, குறைந்தபட்சம், 20 முதல் அதிகபட்சம், 28 டிகிரி வரை குளிர்விப்பு தரும் வகையில், மின் விசிறிகளை உற்பத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
- அசோக், அங்கீகாரம் பெற்ற ஆற்றல் தணிக்கையாளர், ஆற்றல் தணிக்கை பணியகம்.