
திருமணமாகி குழந்தை பிறந்த மூன்றாவது ஆண்டே திலகசாந்தி தன் காதல் கணவன் வரதராசனைப் பிரிந்தாள்.
அவன் பொய்களின் சரணாலயம். நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய அன்று தன் மகன் வாமன் வரதராசனுக்கு 'வாமன் பொய்யாமொழி' என்று பெயர் மாற்றினாள். உண்மையின் அனைத்துருவாய் அவனை வளர்த்தெடுக்க உறுதி பூண்டாள்.
இன்று... தன் தோழி மாலினியோடு 96 படம் பார்த்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறான் வாமன். பிறந்தது முதல் தன் தாயிடம் எதையுமே மறைக்காத வாமனுக்கு, இன்று தன்னுடன் திரைப்படம் பார்க்க யார் வந்தது என்பதை மறைக்கத் தோன்றியது. 'பொய் சொல்வது எப்படி' என்பதைப் பயில இணையவெளியில் குப்புற விழுந்தான்.
உணவு மேசையில் திலகசாந்தி எதுவும் கேட்கவில்லை. அவள் படுக்கை அறையைத் தேடி வந்து அருகில் அமர்ந்தும் அவள் பேசவில்லை. பொறுமை இழந்தான் வாமன். 'அம்மா... இன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு கேட்கலையே...'
'ஆங்... இன்னைக்கு படத்துக்கு போனேல்ல; படம் எப்படி?'
'நல்லா இருந்துச்சு!'
'சரிடா... துாங்கு!'
உடலையும் பொய்யையும் முழுக்க போர்த்தி அவன் துாங்க... திலகசாந்தி சிரித்துக் கொண்டாள். பொய்யின் வாசனை தெரிந்தவளுக்கு பெண்ணின் வாசனையா தெரியாது.
சிறுகதை: வாமன்
எழுதியவர்: கபிலன் வைரமுத்து
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்

