PUBLISHED ON : ஆக 02, 2026

வள்ளி, சாணார்பட்டி: எனது 5 வயது மகனுக்கு முன் வரிசை பற்கள் கறுப்பாக, சொத்தை யாக உள்ளன. எதனால் ஏற்படுகிறது?
குழந்தைகளின் பால் பற்கள் மிகவும் சிறியவை. பற்களின் வெளிப்புற எனாமலுக்கும் உள்ளே இருக்கும் நரம்புக்கும் இடைவெளி மிகக் குறுகியது. பால் பற்களில் சொத்தை ஏற்பட்டால் கிருமிகள் விரைவாக நரம்புகளை அடைந்து தொற்று, வலியை உண்டாக்கும். பெரும்பாலும் பற்களை அகற்ற வேண்டியிருக்கும்.
அதிக இனிப்பு எடுத்துக்கொள்வது, உணவு உட்கொள்ளும் முறை, பற்களை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது போன்றவை பல் சொத்தைக்கு முக்கிய காரணம். உணவில் இருக்கும் மாவுச்சத்து பற்களில் ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையது. அவை நீண்ட நேரம் பற்களின் மேல் ஒட்டி இருந்தால் படலம் போன்று உருவாகும். உமிழ்நீர் அதன் மீது படுவதால் அமிலம் போன்ற திரவம் சுரக்கும். இது பற்களை வேகமாக அரித்து சொத்தையை ஏற்படுத்தும். அதனால் தான் பற்கள் அனைத்தும் கருப்பாக இருப்பது போல தெரியும்.
- டாக்டர் கவுதம்செந்தில், பல் மருத்துவ நிபுணர், நத்தம்
எஸ். சங்கரன்,கோம்பை,தேனி: எனது தந்தை மாரடைப்பால் காலமானார். தாத்தாவிற்கும் இதய நோய் இருந்துள்ளது. பாரம்பரியமாக வரும் என்பதால் எனக்கு இதய நோய் ஏற்படுமா? தடுக்க நான் என்ன செய்ய வேண்டும்?
உங்களது தந்தைக்கும், தாத்தாவிற்கும் மாரடைப்பு ஏற்பட்டது என்றால் உங்களுக்கும் மாரடைப்பு வருவதற்கு சாத்தியக்கூறுகள் சற்று அதிகமாக உள்ளன. அதை தவிர்க்க ரத்த அழுத்தம், சர்க்கரை, லிப்பிட் புரோபைல் போன்ற அடிப்படை பரிசோதனைகள் செய்து கொள்ளலாம். சிலருக்கு லைப்போ புரோட்டீன் மற்றும் இதய கால்சியம் (CT Calcuim Score ) பரிசோதனைகள் இதய நோய் சிறப்பு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தேவைப்படலாம். இது தவிர மது, புகைப் பிடித்தலை அறவே தவிர்க்க வேண்டும். காய்கறி, பழங்கள், கீரை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சியை தினசரி வழக்கமாக்க வேண்டும். உடல் எடையை கட்டுப்பாட்டில் வைப்பது அவசியம். மன அழுத்தம் இல்லாமல் இருக்க பழக வேண்டும்.
- டாக்டர் விஜயசாரதி, இதயநோய் சிறப்பு மருத்துவர், கம்பம்.
எம்.நாகரத்தினம், ராமநாதபுரம்: சமீபத்தில் எனது தந்தைக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது பார்வை மங்கலாக தெரிவதாக கூறுகிறார். இதற்கு ஏதேனும் தீர்வு தர முடியுமா?
கண்புரை அறுவை சிகிச்சைக்கு பின் கண்களை பராமரிப்பது அவசியம். குறைந்தது 45 நாட்களுக்கு டாக்டர் பரிந்துரைத்த மருந்தை கண்களுக்கு செலுத்த வேண்டும். ஒரு கண் மட்டும் அறுவை சிகிச்சை செய்தால் மற்றொருக்கு கண்ணை நன்றாக கவனித்து கொள்ள வேண்டும். சில நாட்களில் அந்த கண்ணிலும் புரை ஏற்படலாம். வயது, உடல்நிலை பொறுத்து இவை மாறுபடும்.
அறுவை சிகிச்சையின் போது இயற்கை லென்ஸ்சை அகற்றி செயற்கை லென்ஸ் பொருத்துவதால் பக்கவிளைவுகள் ஏற்படும். சிலருக்கு கிட்டப்பார்வை குறைந்து பார்வை மங்கலாக தெரிய வாய்ப்பு உள்ளது. இதனால் கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும்.
கண்கள் உலர்ந்து காணப்பட்டால் அதற்கான மருந்து கண்களுக்கு விட வேண்டும். செயற்கை லென்ஸ் பின்னால் உள்ள உறை சில நாட்களுக்கு பின் மங்குவதால் இரண்டாம் நிலை கண்புரை ஏற்படும். இதற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. லேசர் சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.
- டாக்டர் எஸ்.ஆனந்தன், துணை பேராசிரியர், கண் மருத்துவப் பிரிவு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
க.அன்புச்செல்வி, பிரான்மலை: ஹைப்பர் தைராய்டிசம் என்றால் என்ன. எவ்வாறு பாதிக்கிறது?
தைராய்டு சுரப்பி அதிகப்படியான தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யும்போது ஹைப்பர் தைராய்டிசம் ஏற்படுகிறது. இது உடலின் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்துகிறது. அதனால் உடல் எடை குறைகிறது. கை நடுக்கம், வேகமான அல்லது சீரற்ற இதயத் துடிப்பு, அதிகரித்த பசி, பதற்றம், கவலை மற்றும் எரிச்சல். மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள். வெப்ப உணர்திறன் அதிகரித்தல், குடல் இயக்க முறைகளில் ஏற்படும் மாற்றங்களால் அடிக்கடி மலம் கழித்தல், சோர்வு, தசை பலவீனம், துாக்கப் பிரச்னை உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். முயற்சி செய்யாமல் உடல் எடை குறைந்தாலோ, அல்லது முறையற்ற இதயத்துடிப்பு இருந்தாலோ உடனடியாக அருகில் உள்ள டாக்டரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.
- டாக்டர் நபீஷாபானு, வட்டார மருத்துவ அலுவலர், பிரான்மலை
சுரேஷ், சிவகாசி: எனக்கு 35 வயதாகிறது. பெரும்பாலும் வெயிலில் அலையும் வேலை. இதனால் மாலை நேரத்தில் அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. தவிர்க்க என்ன செய்யலாம்?
வெயிலில் தொடர்ந்து அலைவதால் நீர்ச்சத்து குறையும். இதனால் தலைவலி இயல்பாகவே வரும். தவிர மூளை அழுத்தம் அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்பட்டு வெப்ப நோய்களான ரத்த குழாய் அடைப்பு உள்ளிட்டவைகள் வரக்கூடிய வாய்ப்பு ஏற்படும். முடிந்த வரையிலும் வெயிலில் அலைவதை தவிர்க்க வேண்டும். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவு சாப்பிட வேண்டும். இயற்கை குளிர்பானங்களான இளநீர், மோர் அருந்த வேண்டும். பழங்கள், கஞ்சி, கூழ் சாப்பிடுவது மிகவும் நல்லது.
- டாக்டர் அய்யனார், தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை, சிவகாசி.
