சரித்திர சங்கமம்: புதுவைக்குப் போக மறுத்த சென்னை நெசவாளர்கள்
சரித்திர சங்கமம்: புதுவைக்குப் போக மறுத்த சென்னை நெசவாளர்கள்
PUBLISHED ON : ஜூன் 23, 2025

அது பதினெட்டாம் நூற்றாண்டு. புதுச்சேரி, பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. சென்னை, ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவ்விருவருக்குமான ஆதிக்கப்போட்டியில் அடிக்கடி சண்டை நடந்துகொண்டிருந்தது. ஆங்கிலேயரின் முக்கியமான வணிகத் தலமாக சென்னை இருந்தது. சென்னையில் இருந்து துணிகள் நெய்து, இங்கிலாந்திற்கு அவர்கள் ஏற்றுமதி செய்துகொண்டிருந்தனர். 1746ஆம் ஆண்டு அடையாறுப் போரின் தொடர்ச்சியாக புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிக்கொண்டனர்.
சென்னையைப் போலவே புதுச்சேரியை, தென்னிந்தியாவின் பெரிய வணிக நகரமாக்க வேண்டும் என்று அப்போதைய புதுச்சேரி ஆளுநர் விரும்பினார். அதற்காகச் சென்னையில் உள்ள வணிகர்கள், நெசவாளர்கள் புதுவைக்கு இடம்பெயர வேண்டும் என்று கட்டளை இட்டார். கட்டளை தமுக்கு அடிக்கப்பட்டு, சென்னை முழுவதும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் பிரெஞ்சு ஆங்கிலேயப் போரின் போது, பிரெஞ்சுப் படையினர், தங்கள் வீடுகளை இடித்துப் பொருட்களைக் கொள்ளை அடித்ததையும் தங்களுக்கு இழைக்கப்பட்டக் கொடுமைகளையும் சென்னை வணிகர்கள் மறக்கவில்லை. ஆகையால் புதுவைக்குப் போக மறுத்து விட்டனர். இதனால் மேலும் ஆத்திரம் கொண்ட பிரெஞ்சு ஆளுநர், மூன்று நாள்களுக்குள் வணிகர்கள் புதுவைக்கு வராவிட்டால், அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவித்தார்.
மொத்த சொத்து போனாலும் பரவாயில்லை என்று பெரும்பாலான வணிகர்கள் புதுவைக்குச் செல்ல மறுத்து விட்டனர். சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த நெசவாளர்களின் வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன. அவர்கள் ஆளுநருக்குக் கடிதம் எழுதினர்.
ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய அனந்த ரங்கம் பிள்ளை, கடிதத்தைப் படித்துக்காட்ட, 'இடிக்கச் சொன்னதே நான்தான். அவர்கள் புதுவை வர வேண்டும் என்பதற்காகவே நான் இந்த ஏற்பாட்டைச் செய்தேன்' என்றார் அவர்.
நெசவாளர்களின் வீடுகளை இடிக்கச் சொன்ன அந்தப் பிரெஞ்சு ஆளுநர் யார்?
விடைகள்: டூப்ளெக்ஸ் (Joseph- François Dupleix)
ஆதார நூல்: எம்.பி.இராமன் எழுதிய, ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி-- மண்ணும் மக்களும் (1674--1815)