/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
இந்திய மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் அமெரிக்கா ஸ்கவுட்!
/
இந்திய மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் அமெரிக்கா ஸ்கவுட்!
இந்திய மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் அமெரிக்கா ஸ்கவுட்!
இந்திய மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் அமெரிக்கா ஸ்கவுட்!
ஜன 15, 2025
அமெரிக்காவில் சொகுசு வாழ்க்கை என்பதும் பிள்ளைகள் கஷ்டம் நஷ்டம் தெரியாமல் வளர்கிறார்கள்-- வளர்க்கப் படுகிறார்கள் என்பதும் பொதுவாய் உள்ள கூற்று. அதுபோல் எல்லாமே எளிதாய் கிடைத்து வளர்பவர்களுக்கு பின்னால் இந்தியாவிற்கோ பிற நாடுகளுக்கோ செல்லும் போது அந்தந்த சூழலுடன் பொருந்திப் போவது சிரமமாகிவிடுகிறது. ஆனால் வாழ்வில் எந்த சவால்கள்-சோதனைகள் வந்தாலும் எதிர்கொள்ளவும் தன்னம்பிக்கை மற்றும் சேவை மனப்பான்மையை வளர்க்கவும் அங்குள்ள 'ஸ்கவுட்' உதவுவதை கண்கூடாக காண முடிந்திருக்கிறது.
பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் ட்ரூப் - 2 ஸ்கவுட் மாஸ்டராக தமிழரான சுரேஷ் பாண்டியன் இருக்கிறார். இவரது பூர்வீகம் விருதுநகர். ஆனால் அப்பா நடராஜனின் வியாபாரம் காரணமாய் இவரது பிறப்பு -வளர்ப்பு-படிப்பு எல்லாமே ஹைதராபாத்தில்! சுரேஷ் ஹைதராபாத் உஸ்மானியா யுனிவர்சிட்டியில் MCA படித்தவர். கடந்த 22 வருடங்களாய் பிரபல FEDEX நிறுவனத்தில் பணிபுரிந்துக்கொண்டே ஸ்கவுட்டிலும் தன் சிறப்பான தன்னார்வ சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
துணிவும் தன்னம்பிக்கையும்
இந்த ஸ்கவுட்டில் ஜூனியர், சீனியர் , பெண்கள் ஸ்கவுட் என பலப் பிரிவுகள் உண்டு. இதில் சேரும் மாணவ மாணவிகளுக்கு வாழ்க்கையில் எந்த பிரச்னைகளையும் சவாலாய் எதிர்கொள்ளும் துணிவும்,தன்னம்பிக்கையும் விதைக்கப் படுகிறது. அங்கு மாணவர்கள் எதையும் சுயமாய் செய்யும், மற்றும் எதிர்கொள்ளும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக இவர்களுக்கு அடர்ந்த காடுகளில் அவ்வப் போது கேம்ப் நடத்தப்படுகிறது. மழை வெயில், பனி புகை, ஐஸ் கட்டி குளிரை பொருட்படுத்தாது இவர்கள் பயிற்சியை மேற்கொள்கிறார்கள், அதுவும் சந்தோஷமாய் என்பது விஷேசம்.
காம்பில் தங்க வேண்டி காடு, மலை என கொண்டு போய் விட்டு விடுவார்கள். அங்கு கரடு முரடுகளை சரி பண்ணி இவர்களே டென்ட் அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான பயிற்சி அங்கு அளிக்கப் படுகிறது. இவர்களே உணவு தயாரித்துக் கொள்ள வேண்டும். அதற்கும் பயிற்சி! துணிமணி துவைக்கணும். சொகுசு, ஏஸி, வாகனம் எதையும் எதிர்பார்க்க முடியாது. எல்லாம் தனக்குதானே!
தலைமைப் பண்பு
காடுகளில் வன ஜீவன்கள், பூச்சு பொட்டு எதற்கும் பயப்படாமல் அவற்றை துணிவுடன் இவர்கள் எதிர்கொண்டாக வேண்டும். ஏதாவது ஒன்று என்றால் தளர்ந்துப் போகாமல் சமாளிக்க முதலுதவி கற்று தரப் படுகிறது. எங்கும் எப்போதும் சிறந்த கம்யூனிகேசன், தலைமை பண்பு, திடீரென ஏதாவது எந்த ரூபத்திலாவது தாக்குதல் நடக்கும் பட்சத்தில் அதிலிருந்து எப்படி தப்பிப்பது, போன்று பலதையும் இவர்களுக்கு கற்பிக்கிறார்கள். அவற்றை செயல் முறையிலும் கையாள வைக்கிறார்கள். அந்த கேம்ப் அத்தனை கஷ்டமானதாக இருக்கும். உடல் நோகும். அதற்காக மாணவர்களும் அஞ்சுவதில்லை.
இந்த ஸ்கவுட் சான்றிதழ் கல்லூரியில் சேரவும் மாணவர்களுக்கு பக்க பலமாக உள்ளது. ஸ்காலர்ஷிப்பும்கூட பெற்றுத் தருகிறது. இப்படி பயிற்சி பெறும் மாணவர்களை சமூகத்தில் அந்தந்தப் பகுதிகளில் தேவைப்படும் உதவிகளை செய்ய வைக்கிறார்கள். ஏரியாவை சுத்தம் செய்கிறார்கள். ட்ராபிக் கண்ட்ரோல் செய்கிறார்கள். மழை வெள்ளம் சமயத்தில் களத்தில் இறங்கி உதவுகிறார்கள்.
பொது சேவை
ரோட்டரி கிளப் போன்ற அமைப்புக்களின் ஸ்பான்சருடன், மாணவர்களே அவ்வப்போது நிதி திரட்ட நிகழ்ச்சிகளும் செய்கிறார்கள். இதற்கு பெற்றோர்களும், பொதுமக்களும் மனமுவந்து நிதி அளித்து வருகிறார்கள். சேதமாகும் அமெரிக்கா நாட்டு கொடிகளை குப்பையில் தூக்கிப் போடுதல் அங்கு குற்றம். அவற்றை இவர்கள் சேகரித்து உரிய மரியாதையுடன் எரிப்பார்கள்.
அங்கு பயிற்சிகள் எல்லாம் கடுமை என்றாலும் கூட மாணவர்கள் சலிப்பதில்லை. மிகுந்த ஆர்வத்துடன் இந்த சேவையில் ஈடுபடுகிறார்கள். அதனால் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் கஷ்டப்படுகிறார்கள் என பாராமல், அந்த கஷ்ட நஷ்டம் அவர்களை புடம் போடுவதால் சந்தோஷமாய் அனுப்பி வைக்கிறார்கள்.
ஒரு சமயம் கடுமையான மழை காரணமாய் ரித்விக் எனும் மாணவன் மழையில் நனைந்து குளிரில் ஜன்னி கண்டு மயங்கி விழ காம்ப் மாஸ்டர் சுரேஷ் உடனே அவனுக்கு முதலுதவி கொடுத்து காப்பாற்றிய சம்பவங்களும் உண்டு.
ஒரு நேர்காணல்
அப்படி உயிர் பிழைத்து வந்த அந்த ரித்விக் சரவணனைச் சந்தித்து அவனது அனுபவத்தைக் கேட்டேன். 'இந்த ஸ்கவுட் மூலம் எனது உடல் உள்ளம் எல்லாம் புத்துணர்ச்சியும் வளமும் பெற்று இருக்கிறது. எங்கும் எதுவும் செய்ய முடியும் என்கிற தன்னம்பிக்கையை என்னுள் வளர்த்திருக்கிறது. வீட்டில் பெற்றோரை எதிர்பார்க்காமல் எனது வேலைகளை நானே பார்த்துக் கொள்கிறேன். மொத்தத்தில் ஸ்கவுட்டில் இருப்பது சந்தோஷமாகவும் பெருமையையும் இருக்கிறது' என்கிறான்.
அத்துடன் அமெரிக்காவின் வழக்கமான நடைமுறைப் படி ரித்விக் தனது பாக்கெட் மணிக்காக அக்கம் பக்கம் வீட்டுத் தோட்டங்களில் புல்வெட்டியும் சம்பாதித்து மனநிறைவு கொள்கிறான்.
நம்மஊரிலும் கூட NCC, NSS, SCOUT எல்லாம் இருக்கிறது. ஆனால் எத்தனை மாணவர்கள் அவற்றில் சேர்ந்து பயிற்சி பெறுகிறார்கள்? ஒன்று படி..படி என மார்க்குக்காக ஓட்டம். அப்புறம் சுற்றுப்புற தாக்கத்தில் பலரும் அரசியல்,சினிமா, வீடியோ கேம், மது போதை என திசை மாறுவதும் நடக்கின்றன.
அமெரிக்காவின் சூழலில் வேறு மாதிரியான வாழ்க்கை பக்கம் மாணவர்கள் தடம் புரண்டு விடாமல் சேவை மற்றும் உழைக்கும் மனநிலையை இந்த ஸ்கவுட் உருவாக்கித்தந்துள்ளது உண்மை.
-என்.சி.மோகன்தாஸ் with பிட்ஸ்பர்க் M. பிரவீனா; பட கலவை: வெ.தயாளன்