/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
அமெரிக்காவில் சமையற்கலையில் சாதித்த தமிழர்
/
அமெரிக்காவில் சமையற்கலையில் சாதித்த தமிழர்
ஜன 17, 2025

சதீஷ் தனது ஹோட்டல் மேலாண்மை இளங்கலை படிப்பைத் தொடங்கினார். படிப்பின் ஆரம்பத்தில், 'என்ன சமையல் வேலைக்கா போகப்போகிறாய்?' என்று தோழர்கள் கிண்டலாகக் கேட்டாலும், தன் குறிக்கோளில் அசராது முழுமையான ஈடுபாட்டுடன் படித்து முடித்தார். சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களின் நட்சத்திர உணவகங்களிலும் சொகுசு கப்பலிலும் சமையல் பணியில் அனுபவம் சேர்த்து, 12 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவை அடைந்தார்.
மேரிலாந்தில் உள்ள ஒரு சில தென் இந்திய உணவகங்களில் அவர் ஒரு சமையல்காரராக வேலை செய்த போது நான் அவ்வப்போது உணவு உண்ணச் செல்லும் நேரத்தில் அவரை சிலமுறை நான் உணவகத்தில் சந்தித்ததுண்டு. பொதுவாக அமெரிக்காவில் கணினித் துறையில் உள்ளவர்கள் கூடுதல் வருமானத்திற்காக உணவகங்களை நடத்துவது வழக்கம். ஆனால், சதீஷ் அமெரிக்காவுக்குச் சமையல்காரராக வந்ததோடு மட்டுமின்றி, தன் திறமையால் இன்று ஒன்றுக்கும் மேற்பட்ட உயர்தர உணவகங்களை வெற்றிகரமாக நடத்தும் நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார்.
மேரிலாந்து “சங்கம்”
சமீபத்தில், மேரிலாந்தில் அவர் தொடங்கிய “சங்கம்” என்ற உணவகம் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்து, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சமையல் துறையில் படித்து, உணவகங்களில் முழுநேர பணியாற்றிக் கொண்டு மேரிலாந்தில் பெரிய உணவகம் தொடங்கிய முதல் தமிழர் என்ற பெருமையை சதீஷ் பெற்றுள்ளார். அவரின் வெற்றிக்கதையும் கடந்து வந்த பாதையையும் அறிய, சமீபத்தில் அவருடன் ஓர் உரையாடல் நடத்தினேன்.
சதீஷ், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அருகில் உள்ள பாலத்தளி என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர். இவரது தந்தைப்பெயர் வீரபெருமாள் தாயார் சித்ரா. சிறு வயதிலேயே சமையற்கலை மீது அதிகப் பற்று கொண்டவர். தன் அத்தை மகன் சமையற்கலைப் படிப்பில் சேரும்போதே தானும் அதே துறையில் படித்து அமெரிக்கா வரை சென்று சாதிக்க வேண்டும் என்று இரவு பகல் பாராமல் முயன்றவர். இந்தியாவில் வேலை செய்யும் போது, வளைகுடா நாடுகளில் அதிக சம்பளம் உள்ள வேலை வாய்ப்புகள் வந்த போதிலும், தான் அமெரிக்கா செல்ல வேண்டும் என்பதிலேயே முனைப்புடன் செயற்பட்டார்.
ஒருவர் தங்களின் இலக்கை நோக்கி முன்னேற, பலத் தடைகளைத் தாண்டி கடின உழைப்போடு சிலப்பல உத்திகளையும் கையாள வேண்டும். அவர் கடந்து வந்த பாதைகள் கரடு முரடாக இருந்தபோதிலும், இன்று குறிக்கோளை அடைந்தும் மென்மேலும் உயர உழைத்துக் கொண்டிருக்கிறார்.
வயிறும் வறுமையும்
ஒளவையார், உணவிற்காக, பசிக்கும் வயிற்றுக்கும் நடக்கும் போராட்டத்தையும் வறுமையையும் குறித்து நல்வழி என்ற நூலில் எழுதியது மனிதனின் எல்லாக் காலகட்டத்திற்கும் சாலப்பொருந்தும்.
'ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது.'
ஆனால், அமெரிக்காவில் வயிற்றுப் பசிக்கு மக்களிடையே நிறையப் பணம் இருந்தும், நல்ல ருசியான உணவும், உண்டபின் வயிறு கெட்டுப் போகாமல் இருக்கும் நல்ல தென் இந்திய உணவுவகைகளை எல்லா ஊர்களிலும் கண்டறிவது என்பதும் கடினமாக உள்ளது. இப்படி வயிற்றுக்கு உணவு ருசியாக அளிக்க வேண்டும் என்பதை முழுநேரத் தொழிலாகக் கொண்டு உணவகங்கள் தொடங்கி மக்களுக்குத் திருத்தியுடன் உணவு அளிக்கிறார் சதீஷ்.
உணவகத் தொழில் எப்போதும் ஒரே சீராக இல்லாமல் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்கும் நிலை உள்ளது. அதுபோல், சிலரின் தொழில் சரிவுறும் போது, அவர் அதனை ஒரு சவாலாக எடுத்து, சில உத்திகளைக் கையாண்டு வியாபாரத்தைப் பெருக்கி இருப்பதாக விவரிக்கிறார். மேரிலாந்தில் வேலை செய்த போதும், நியூஜெர்ஸி, பென்சில்வேணியா போன்ற மாகாணங்களுக்குச் சென்று அங்குள்ள உணவகங்களுக்குப் பயிற்சி அளித்து இலாபகரமாக மாற்றி இருக்கிறார்.
புதிய உத்திகள்
வார இறுதியில் வாழை இலை உணவு, உணவுத் திருவிழா, பல்சுவை உணவு வகைகள், பல தமிழ் அமைப்புகளின் சங்கமங்களுக்கு உணவு தயாரிப்பது எனச்செய்து நலியுறும் உணவகங்களின் மதிப்பை உயர்த்தி மற்றவர்களுக்கு உதவி புரிந்திருக்கிறார். நியூஜெர்ஸியில் கஜா புயலிற்காக நன்கொடை திரட்ட பலருக்கு உணவு தயாரித்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. இவைகள் யாவும் அவர் தனியாக உணவகம் தொடங்குவதற்கு அடித்தளமாகவும் வலுவான தூண்களாகவும் அமைந்தன.
அமெரிக்க தேசிய ரெஸ்ட்டாரன்ட் அமைப்பின் கணிப்பின்படி, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்க உணவகத் தொழில் வரலாற்றிலேயே முதன்முறையாக $1 டிரில்லியன் டாலர் விற்பனையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொழில், நாட்டின் 15.7 மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன், பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கோவிட் கற்றுத் தந்த பாடம்
COVID-19 காலத்துக்கு முன், அமெரிக்க உணவக தொழில் வாடிக்கையாளர்களின் நிலையான ஆதரவைப் பெற்று, செழிப்புடன் இயங்கிய ஓர் துறையாக இருந்தது. ஆனால், கோவிட் தொற்றுக்குப் பிறகு, இத்துறை பல திடீர் பின்னடைவுகளையும் சவால்களையும் சந்தித்தது. இவை புதிய மாற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் வழிவகுத்தன. குறிப்பாக, வீட்டிலிருந்து வேலை செய்யும் பழக்கத்தால் வாடிக்கையாளர்களின் தேவைகள் மாறி, உணவகங்கள் புதிய தொழில்நுட்பங்களை தகுந்தவாறு ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
உணவை டெலிவரி செய்வதும் ஆர்டர் செய்தவர்களே கடைக்கு வந்து எடுத்துச் செல்லும் டேக்அவுட் ஆர்டர்களை அவசரமாகத் தயாரிப்பதும் அதிகரித்தன. டெலிவரிக்காக உணவைத் தயாரிப்பதற்காகப் பல புதிய வசதிகளும் தொழில்நுட்பங்களும் தேவைப்பட்டன. உணவகங்களில் டிஜிட்டல் மெனுக்கள், ஆன்லைன் முன்பதிவுகள் ஆகியவற்றைக் கொண்டு புதிய மாற்றங்கள் ஏற்பட்டன. QR குறியீடுகள் பழைய மெனுக்களை மாற்றியது. மேலும், வாடிக்கையாளர்கள் உடனுக்குடன் ரீவியு செய்து உணவகங்களை எப்போதும் விழிப்போடு இருக்கச் செய்கிறார்கள்.
இவையெல்லாம் உணவகத் தொழிலில் சவால்களாக இருக்கின்றன. இவற்றைக் கடக்க முடியாமல் பல உணவகங்கள் கோவிட்-19 கால கட்டத்தில் மூடப்பட்டன அல்லது விற்கப்பட்டன. இதுபோன்ற பலவிதமான அனுபவங்களைக் கடந்து பாடம் கற்றும் அதிலிருந்து சமாளித்தும் புதியப் பொலிவுடன் சகல வசதியுடன் “சங்கம் இந்தியன் உணவகம்” ஒன்றை மேரிலாந்தின் ஹவார்ட் கவுண்டியில் நிறுவி மக்களிடையே பெரும் நன்மதிப்பை பெற்று இருக்கிறார்.
திறப்பு சுவரொட்டி, சுற்றறிக்கை என எந்த ஒரு பிரமாண்ட விளம்பரமும் இல்லாமல், வாடிக்கையாளர்களின் வாய்மொழிப் பரவல் மூலம் மட்டுமே பலரைச் சென்றடைந்து இன்று பாராட்டைப் பெற்றிருக்கிறது “சங்கம்” உணவகம். இவர் பால்ட்டிமோர் கவுண்டியில் ஆரம்பித்த உணவகம் நிறைய மருத்துவமனைகள் உள்ளப் பகுதி என்பதால் பல மருத்துவர்கள் வாடிக்கையாளர்களாக மாறியுள்ளனர்.
சமையல் நிபுணர்களின் உடையும் மருத்துவர்களின் உடையும் வெள்ளை நிறம் என்பதால் உணவு தயாரிப்பதும் உயிரைக் காப்பாற்றும் மருத்துவம் போல் உயர்வானது என்று கருதுகிறார். உணவகத் துறை சார்ந்து மாணவர்கள் தங்களின் கல்வியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உலகளாவிய வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி அடைந்து அதிகப்பணம் சம்பாக்க முடியுமெனவும் விருந்தோம்பல் மூலம் தமிழ் மரபிற்கும் பெருமை சேர்க்கலாம் எனவும் சதீஷ் வலியுறுத்துகிறார்.
இலக்கியங்களில் முக்கியத்துவம்
தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் உணவை வாழ்வின் ஓர் அங்கமாகக் குறிப்பிடுகின்றன. சமையற்கலை, மனித உணர்ச்சிகள், காலப் பருவங்கள், அறுசுவை உணவுகள், வாழ்வின் பல கொண்டாட்டங்கள் என நம் உறவுடன் இணைந்தே இருக்கிறது. தமிழ் மரபு உணவு வகைகளைச் சமைத்து உணவளிக்கும் சமையல்காரர்கள், விருந்தோம்பலின் முக்கியத்துவத்தையும் அதன் கலை வடிவங்களையும் இலக்கிய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள தமிழ் பாரம்பரிய முறைகளை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்கின்றனர்.
தமிழ் சமையல் கலையை இதுபோல் உணவகங்கள் தொடங்கிப் பரப்புவதன் மூலம், சமையல் கலைஞர்கள் மரபுகளைப் பாதுகாத்து, ஒவ்வொரு உணவிற்கும் பின்னால் உள்ள ஆழமான கலாச்சார முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி, சமையற்கலையும் நிகழ்த்துக் கலையின் ஓர் அங்கம் என்று உணர்த்துகின்றனர்.
பிறந்த ஊருக்கு பெருமை
சதீஷ் சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தாலும், தனக்குப் பிடித்த சமையல் கலைப் படிப்பை தொடர்ந்தார். அந்தத் துறையில் வேலை செய்து, கடின உழைப்பின் மூலம் அமெரிக்காவில் தனது கனவை நனவாக்கினார். இன்று, அவரது வெற்றியால் கிராமத்திற்கும் பெருமை சேர்ந்து, அவர் வளர்த்த கடின உழைப்பின் உயர்வை உலகம் அறிகிறது. அவரை முன் உதாரணமாகக் கொண்டு, அவரது கிராமத்திலுள்ள மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப படிக்கத் தொடங்கியுள்ளனர். சிலர் ஹோட்டல் மேலாண்மையில் (Hotel Management) கல்வி முடித்து அவரிடமே வேலை செய்கின்றனர்.
தமிழ் மொழிக்காக “சங்கம்” தொடங்கி தமிழ் வளர்க்கும் தமிழ் அறிஞர்களைப் போல 'சங்கம் உணவகம்' பல தொடங்கி தமிழர் சமையற்கலையின் பெருமையை பரப்பும் இப்பணி மேலும் விரிவடைய, அவர் தொடர் முன்னேற்றத்திற்கு நாம் அனைவரும் அவரை வாழ்த்துவோம்!
- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்