/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
ஆலயங்களைப் பாதுகாக்கும் அமெரிக்கா!
/
ஆலயங்களைப் பாதுகாக்கும் அமெரிக்கா!

அமெரிக்காவில் சர்ச்சுகள் மட்டுமில்லை, மசூதிகளையும் நிறைய காணலாம். இந்து கோயில்கள் எண்ணிக்கையில் குறைவு என்றாலும் கூட அதன் வளர்ச்சியில் அரசாங்கம் துணையாக இருப்பது விசேஷம்.
அமெரிக்காவில், இந்தியர்களில் தெலுங்கர்கள் அதிகம் என்பதால் வெங்கடாஜலபதி பிரபலம். ஆனாலும் நம்மூர் போல அம்மன், சிவன், முருகன், விநாயகர் ஆஞ்சநேயர் ,பெருமாள் என்று தனித்தனி ஆலயங்கள் கிடையாது. எந்தக் கோயில் என்றாலும் அதில் வடக்கு தெற்கு என மகிமையுள்ள அனைத்து சாமிகளையும் வைத்திருக்கிறார்கள்.
அமெரிக்க கோவில்களில் அந்தந்த பகுதியில் உள்ள இந்திய பக்தர்களை வகை பிரித்து கோயில் கட்டுவது சிரமம். அதனால் அனைத்து பிரிவினரும் கலாச்சார வித்தியாசமின்றி அவரவர் பண்டிகை காலங்களில் வந்து சிறப்பு பூஜைகள் செய்யவும், தரிசிக்கவும் வசதியாக உள்ளது.
நம்மூரில் கோவில், பூஜைகளையும்- சம்பிரதாயங்களையும் விமர்சிப்பவர்கள் உண்டு. அங்கு அதெல்லாம் கிடையாது. வெளிநாட்டவர்களும் அமெரிக்கர்களும் கூட சென்று தரிசிக்கின்றனர். அவர்களில் பலரும் ஹிந்து மத சம்பிரதாயங்களால் ஈர்க்கப்பட்டு ஹிந்துவாக மாறி- பஜன் - ஸ்லோகம் சொல்வதையும் காணமுடிகிறது. அத்துடன் உள்ளூர் பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்களை அழைத்து வந்து கோயில் விசேஷங்களை அறியச் செய்கிறார்கள்.
அங்கு கோயில் நிர்வாகம் அந்தந்த பகுதிகளில் உள்ள இந்தியர்களால் NGO வாக நிர்வகிக்கப் படுகிறது. கோவிலுக்கு வருமானம் பக்தர்கள் தரும் காணிக்கையும் நன்கொடையும் தான். அதற்கு நம் மக்கள் மனமுவந்து அள்ளித் தருகிறார்கள்.
அங்கு கோயில் வெறும் பக்திக்காக மட்டுமில்லாது கலாச்சார சங்கமமாகவே இயங்கி வருகிறது. கோயில் முகப்பு தென்னிந்தியாவில் உள்ளது போல கோபுரத்துடன் இருந்தாலும் உள்ளே வட இந்திய பாணியில் அமைக்கப்படுகின்றன. உள்ளே பள பளப்புடன் விசால பிரகாரம்! தியான கூடம்! அர்ச்சனை - பூஜைப் பொருட்கள் -பூக்களுக்கு அங்கு பஞ்சமில்லை. அன்னதானம் வழங்க அங்கேயே சமையல் மற்றும் சாப்பாட்டு கூடம்!
அமெரிக்காவில் சைவ உணவகங்கள் குறைவுஎன்பதால் நம் வகை உணவுகளுக்கு தேடித் தேடிப் போக வேண்டும். அதனால் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்து சாப்பாட்டுக்காக எங்கும் போய் அலைய வேண்டியதில்லை. அதற்காக அங்கேயே ரெஸ்டாரண்டுகள் - தரமான - நியாயமான விலையில் உணவு வழங்கப்படுகின்றது.
அங்கு ஆலயம் கட்டுவதற்கு எந்த வித தடங்கலும் இல்லை. நம்மவர்கள் ஒரு தொண்டாக - குழுவாக - சேர்ந்து இடம் வாங்கி முறைப்படி பதிந்து நிபுணர்களை வைத்து கட்டுகிறார்கள். பூஜை, கும்பாபிஷேகம் போன்றவற்றை செய்ய அமெரிக்கா முழுக்க நூற்றுக்கணக்கில் குருக்கள் உண்டு. ஆகம விதிகளை, இந்தியாவில் படித்துத் தேர்வாகி அனுபவம் உள்ளவர்களை இன்டர்வியூ செய்து அழைத்து வருகிறார்கள். அதற்கு அரசாங்கம் R- 1 எனும் ரிலிஜியஸ் விசா வழங்குகிறது. இந்த விசாவில் வருபவர்களுக்கு கோயில் நிர்வாகம் சிறப்பான சம்பளம் வழங்குவதுடன் குடும்பத்துடன் தங்குவதற்கு குவார்டர்ஸ்ம் தருகிறது. அல்லது வெளியே தங்கினாலும் செலவை ஏற்றுக் கொள்கிறது. அமெரிக்காவில் பொதுவாய் கிரீன் கார்டு கிடைப்பது அத்தனை எளிதல்ல. ஆனால் இந்த குருக்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. இவர்களின் பிள்ளைகளின் கல்வியும் அங்கு எளிதாகிறது.
கோயிலில் அர்ச்சனைக்கும், விசேஷ பூஜைகளுக்கும் கட்டணம் உண்டு. ஆனால் தட்டில் போடப்படும் காணிக்கைகள் ஆலய நிதியில் சேர்க்கப்படுகின்றன. அதே சமயம் கல்யாண - பிறந்தநாள் பூஜைகளுக்காக பக்தர்கள் விரும்பித் தரும் காணிக்கைகளை குருக்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த குருக்களுக்கு அலுவலகம் போல காலை மாலை என எட்டு மணி நேர வேலை. பக்தர்களிடம் முகம் சுளிக்காமல் அவர்கள் காட்டும் கனிவு மகிழ்ச்சி தருகிறது.
கோயில்களில் நம்மூர் போல திருமணங்களும் நடத்தி வைக்கப்படுகின்றன. அங்கு நடக்கும் திருமணத்திற்கு நிர்வாகம் தரும் திருமணச் சான்றிதழ் அரசாங்கத்தால் ஏற்கப்படுகிறது. குருக்களை வெளியே பூஜைகள் விசேஷங்கள் , வீடு கிரகப்பிரவேசம் எனவும் நிர்வாகம் அனுப்பி வைக்கும். அதற்கு முன்பதிவும் கட்டணமும் உண்டு. தங்களின் நேரடித் தொடர்புகள் மூலம் வெளி விசேஷங்கள் கலந்து கொள்ளவும் அவர்களுக்கு அனுமதி உண்டு. எப்போதும் பிஸி என்பதால் அவர்களின் தேதி பெறுவது அத்தனை எளிதல்ல.
கோயில்களில் பெருமாள் பிரமோற்சவம், புத்தாண்டு சிறப்பு பூஜை, நவராத்திரி, சிவராத்திரி, கொலு , தீபாவளி பொங்கல் சங்கராந்தி என அனைத்து பண்டிகைகளுக்கும் கூட்டம் அதிகம். அங்கு சிறப்பு மேளாக்களும் நடப்பதுண்டு. கோயில் நிர்வாகம்,பராமரிப்பு சுத்தப்படுத்துவது முதல் அன்றாட காரியங்களை நம் இந்தியர்களே தங்கள் உற்றார் உறவினர் - அமைப்பினர் - பிள்ளைகளுடன் சேர்ந்து செய்து விடுகின்றனர். வாரம் முழுக்க வேலைக்காக ஓடுபவர்களுக்கு வார இறுதியில் கோயில் பராமரிப்பை மன திருப்தியான சேவையாக ஏற்றுக்கொள்கின்றனர்.
கோயிலில் பாட்டு , இசை , நடனம் என பிள்ளைகளுக்கு கற்பித்து அரங்கேற்றமும் நடக்கிறது. கோயில்கள் மூலம் ஏழைகளுக்கு உணவு , உடை மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்படுகின்றன. அவர்களின் நிதி அங்கு மட்டும் இன்றி இந்தியாவிலும் - அன்னதானம் மற்றும் ஏழைகளின் கல்விக்கும் வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள ஒருவர் தங்கள் பகுதியில் செய்ய விரும்பும் உதவி -அல்லது தங்கள் ஊர் கோயில் பராமரிப்புக்கு அங்கு பணம் செலுத்தினால் போதும். அது முறைப்படி - அவர் விருப்பப்படி ஊருக்கு அனுப்பப்பட்டு அக் காரியம் செவ்வனே நிறைவேற்றப்படும்.
இப்படி அமெரிக்காவின் ஆலயம் என்பது வெறும் பக்திக்காக மட்டுமின்றி நம் கலாச்சார காவலராகவும் இயங்கி வருவது சிறப்பு.
குறிப்பு: ஆஸ்டின் ஹிந்து கோவில் படங்கள் சாம்பிளுக்கு இங்கு இணைப்பு. படக் கலவை: வெ.தயாளன்
-என்.சி.மோகன்தாஸ்