
அமெரிக்காவில் வீட்டு வேலைக்கு வருபவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் என்பதால் - வேறு வழியே இல்லை என்றால் மட்டும் ஆட்களை அழைக்கிறார்கள். சாப்ட்வேர் என்ஜினியர் என்றாலும் - நிர்வாகியே என்றாலும் சரி தன் கையே தனக்கு உதவி! பெரும்பாலும் நமக்கு நாமே தான்!
அதே போல பெரும்பாலும் யாரும் டிரைவர்கள் வைத்துக்கொள்வதில்லை. விசா,சம்பளம் என்று தாங்காது என்பதால் சுய காரோட்டம் தானவெளிநாடுகளில் குறிப்பாய் மேற்கத்திய - அரபு -கிழக்கு மத்திய நாடுகளில் உணவுகள் எல்லாம் ஒரே மாதிரி தான். எல்லாமே பன் அல்லது ரொட்டி மயம், -வித வித வேஷங்களில்!
அசைவத்தை விட சைவத்துக்கு விலை அதிகம். அதனால் நம் ஆட்களும் அவேலி உணவுகளுக்கு அடிமை. நம் தோசை.. புரோட்டாவுக்கு சிலர் வீடுகளிலேயே அடுப்பு ரெடி செய்து போட்டு தாக்குகிறார்கள். மென்பொருள் பொறியாளர் நண்பர் கண்ணன் ஆனந்த் இதில் எக்ஸ்பெர்ட்!
வீட்டுக்குள் புகை கூடாது; அ-லாரம் அழும் என்பதால் வெளியே கார்டனில் வைத்து பார்டிகளுக்கு வகை வகையாய் சமைக்கிறார்கள்.
டீ காபி எல்லாம் குறைந்தது 200 ரூபாய்! மகாகஷ்டம். அதுவும் டீபோட்டுத் தருவதில்லை. காசு வாங்கிக் கொண்டு குவளை கொடுத்து விடுவார்கள். அவ்ளோதான். அங்கு டீ, காபி பாக்கெட்டுகளை விதவிதமாய் கொட்டி வைத்திருப்பார்கள். வெந்நீர் பிடித்து - நாமே எடுத்து கலந்து கொள்ள வேண்டும். சொல்லப் போனால் அவர்கள் தரும் குவளைக்கு தான் காசு.
சைவ உணவு உடலுக்கு நல்லது என்றாலும் கூடஅங்கு மனதுக்கு நிச்சயமாய் நல்லதாய் இல்லை. ஒரு சமயம் கடைக்கு போய் வெஜிடபிள் பிசா கேட்க, “வெஜிடபிள் இல்லை -'ஒன்லி பெப்ரோனி!' என்றனர். 'சரி பெப்பர்...என்றால் பெப்பர்! ஓக்கேய்.!” என்று ஆர்டர் கொடுத்து வாங்கி வந்து விட்டேன். அப்புறம் வீட்டுக்கு வந்து பிரிக்கும் போது மாப்ஸ் சொன்னார்.. பெப்ரோனி என்றால் பெப்பர் இல்லையாம் -- பன்றிக் கறியாம்! என்னத்தைச் சொல்ல.
அமெரிக்க ரெஸ்டாரெண்டில் பெரும்பாலும் எல்லாவற்றிலும் HOT DOGS என்று ஒன்றைப் பிரமாதமாய் விளம்பரப்படுத்தி இருக்கின்றனர். அது என்ன ஹாட் டாக்ஸ் பர்கர்கிங், மேக்டொனால்ட், சப் என்று ரெஸ்டாரெண்ட்களின் பெயர்கள் வேண்டுமானால் வெவ்வேறாய் இருக்கலாம் - உணவு வகைகளும் விதவிதமாய் பெயரிடப்பட்டிருக்கலாம். சுற்றி வளைத்து அடிப்படையில் எல்லாமே பன்! பன்னுக்குள் பலவாறாக மடித்து, திணித்து அல்லது திணித்து, மடித்து - கொஞ்சம் சாலட், கொஞ்சம் சீஸ், மாட்டுக்கறி, பன்றிக்கறி... என்று ஒரே அமர்க்களம்!
பிரேக்ஃபாஸ்ட் லஞ்ச், டின்னர் எல்லாமே - எல்லாவற்றுக்குமே பன்தான்! பன்னுக்காகப் பிறந்தவர்கள் மாதிரி சளைக்காமல் கியூ நிற்கிறார்கள். பாலம் பாலமாய், செதில் செதிலாய், ஓடு ஓடாய் சீஸ்கள்! கை காட்டுவதை பன்னுக்குள் அமுக்கி சூடு பண்ணி தந்துவிடுகிறார்கள்.
தண்ணீருக்கு மெகா துட்டு! ஆனால் பெப்ஸி, செவனப், கோலா வகை பானங்களுக்கு மெஷின் வைத்திருக்கிறார்கள். ஒரு முறை பணம் செலுத்திவிட்டால் போதும் அப்புறம் இலவசம்! அதனால் மக்கள் குவளை குவளையாய் பிடித்துக் குடிக்கின்றனர்.
அமெரிக்கா முழுக்க மேக்டொனல்ட் மயம்! குறைந்தது 10 கி.மீ. ஒன்று! மேக்டொனால்டுக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கும் தொடர்பு இருக்கிறதாம்! மேக்டொனால்டில் ஒரு சென்ட் விலை ஏற்றினால் அமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டம் காண்கிறது என்று அர்த்தமாம். பத்து வருடங்களாக சாஃப்ட்வேர் துறையில் அங்கு பணிபுரியும் பிரவீணா பூரிக்கிறார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் - பாதுகாத்தே ஆக வேண்டும் என்கிற அக்கறை அரசாங்கத்திடம் இருப்பது தெரிகிறது. அதற்காக மரங்களை வளர்க்கிறார்கள். பேணுகிறார்கள். கில்லாடிகள்! வீடுகள் அமைக்கக்கூட - சீனா, இந்தோனேஷியா - மலேசியா என்று மரங்களை இறக்குமதி செய்கிறார்கள். அமெரிக்க மரங்கள் பாதுகாக்கப்படுகின்றன! அதனால் நிரம்ப மழை! செழிப்பு! அந்தச் செழிப்பில் பசுமை! விவசாயப் புரட்சி! கோதுமையில் அமெரிக்கா முதலிடம் என்பது நமக்கெல்லாம் தெரியும். மக்காச் சோளத்திலும் கூட அன்னார்தான் முதலிடமாம்.
அரபு நாடுகளில், விலையைப் பொருட்படுத்தாது பாதாம் - பிஸ்தா - ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உபயோகிக்கிறார்கள். இவையெல்லாம் பாலைவனப் பகுதி உற்பத்தி என எண்ணுவோம். அவைகளும் கூட அமெரிக்காதானாம்! அங்கே விலை மலிவாய் தெரிகிறது. அரபு நாடுகளுக்கு விற்று அவர்களுக்கு கொழுப்பேற்றி இவர்கள் கொழிக்கிறார்கள்.
இந்த மிதமான சீதோஷ்ணத்தில் எங்குப் பார்த்தாலும் புல்வெளிகள்! கொழு கொழு பன்றிகள்! மாடுகள்! இதனால் பால் உற்பத்தியும் அதிகம். அவற்றைப் பவுடராக்கி கோதுமையுடன் சேர்த்து இந்தியாவிற்கு அனுப்பினர். இலவசமாய் கொடுத்து நம்மை அமுக்கினதும் உண்டு.
- NCM