
ஜெத்தா: இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புலம் பெயர்ந்து பொருளீட்டும் மக்களுக்காக வளைகுடா நாடுகளில் முக்கிய நகரான ஜெத்தா இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
கடந்த 15.08.2025 அன்று அபீர் மருத்துவ குழுமத்துடன் இணைந்து மாபெரும் மருத்துவ முகாமை நடத்தியது. IWF மருத்துவ அணி செயலாளர் அகமத் பாஷா தலைமையில் நடைபெற்ற முகாமில் பெண்கள் உள்ளிட்ட சுமார் நூறு பேர் பங்கு பெற்றனர்.
அவர்களுக்கு பொது மருத்துவ ஆலோசனை, இரத்த அழுத்த சோதனை, இரத்த சர்க்கரை சோதனை, உயரம் & எடை சரிபார்ப்பு, ECG சோதனை, காது கேட்கும் திறன் பரிசோதனை, கண் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் காது கேட்கும் திறன் பரிசோதனை செய்யப்பட்டதில் 42% பேருக்கு காது கேட்கும் குறை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் 20% பேர் அதிகமாக ஹெட்போன் பயன் படுத்துபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ சேவைகளுடன் கூட, டாக்டர் நியாஸ் சிராஜ் பொதுவான உடல்நல பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். முன்னெச்சரிக்கை மருத்துவம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் தனது விடுமுறை நாளிலும் முகாமுக்கு முழுமையாக ஒத்துழைத்த அபீர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு IWF சார்பாக மலர் கொத்தும் நன்றி கடிதமும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த முகாமை வெற்றிகரமாக நடாத்துவதற்கு முழு ஆதரவு வழங்கிய அல் அபீர் மருத்துவமனை (ஷரபியா) திரு. அப்துல் ஜலீல் அலுங்கல் (Facility Director) மற்றும் திரு. சமீர் ஷரீஃப் (Marketing) ஆகியோருக்கு IWF தனது நன்றியைத் தெரிவித்தது.
முகாமிற்கான ஏற்பாடுகளை IWF ஜித்தா மண்டல நிர்வாகிகள் செய்யது இஸ்மாயில், பொறியாளர் பனங்காட்டூர் அப்துல் ஹலீம், காரைக்கால் அப்துல் மஜீத் , பரமக்குடி செல்வக்கனி, பொறியாளர் நீடூர் ரிழ்வான், அஹமது பஷீர், நெல்லிக்குப்பம் அஷ்ரப், மன்சூர், மன்சூர் அலி, ஆதம், பஜ்ருல்லா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
முடிவில், IWF ஜித்தா மேற்குக் மண்டலம் மற்றும் அபீர் மெடிக்கல் குரூப், ஷரஃபியா இணைந்து நடத்திய இந்த இலவச மருத்துவ முகாம், சிகிச்சை அளிப்பதற்கும் மேல்—மக்களிடையே உடல்நல விழிப்புணர்வு, கருணை மற்றும் மனிதாபிமான சேவையின் சிறப்பு எடுத்துக்காட்டு ஆனது.
-நமது தினமலர், ஜெத்தா செய்தியாளர் எம்.சிராஜ்.
Advertisement