/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
நான்மணிக் கடிகை நாட்டிய விழா கோலாகலம்
/
நான்மணிக் கடிகை நாட்டிய விழா கோலாகலம்

நான்மணிக் கடிகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் எனும் புலவரால் இயற்றப்பட்டது. நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. நான்கு .ரத்தினத் துண்டங்கள் எனும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக் கடிகை எனப் பெயர் பெற்றது.
சங்க இலக்கியங்களை, குறிப்பாக ஐம்பெரும் காப்பியங்களை நாட்டிய நாடகமாக்கித் தனிச்சுவைஞர்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குவது சிங்கப்பூரின் நாட்டியாலயமான கலை இயக்குநர் தேவி வீரப்பனின் சக்தி நுண் கலைக் கூடம். நாட்டிய மாணவிகளின் அரங்கேற்றத்தையே ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான முத்தமிழ்க் காப்பியமாம் சிலப்பதிகாரத்தை மையமாகக் கொண்டு நடத்தி தமிழகப் பத்திரிகைகளுள்ளிட்ட பலரது பாராட்டைப் பெற்ற தேவி நுண்கலைக் கழகம் இவ்வாண்டு தமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக நான்மணிக் கடிகையைக் கருப் பொருளாகக் கொண்டு நாட்டிய மற்றும் இசைப் போட்டியை சிங்கப்பூர் உட்லண்ட்சு வட்டார நூலக அரங்கில் ஏப்ரல் 13 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடத்தியது. கலை இயக்குநர் தேவி வீரப்பன்தலைமையில் நான்மணிக் கடிகை பாடல்களிலிருந்து பத்திகள் தேர்வு செய்யப்பட்டு - அச்சொற்களின் ஆழமான பொருள் மாணவ, மாணவிகளுக்கு எளிமையாக எடுத்துரைக்கப்பட்டது. சாய் விக்னேசுவரன் இவற்றிற்கு அற்புதமாக இசையமைத்தார்.
இளம் தலைமுறையின் “ தமிழே வாழ்க “ எனும் உற்சபக முழக்கமும் நாட்டியக் கலையின்வழி தமிழை உயர்த்தும் பாங்கும் படைப்புக்களும் அனைவரின் நெஞ்சங்களிலும் தமிழ் உணர்வை ஊட்டின. சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய தமிழ் மொழி சேவைகள் பிரிவின் துணை இயக்குநர் அழகிய பாண்டியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பலத்த கரவொலியிடையே இசை வட்டை வெளியிட்டுச் சிறப்பித்தார்.
அனைத்துப் பாடல்களும் சக்தி நுண்கலைக் கூட யூ டியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தகுந்ததாகும். சக்தி நுண்கலைக் கூடத் தலைவர் ராமு கருப்பையா சிறப்பு விருந்தினருக்கும் இசையமைப்பாளர் சாய் விக்னேசுவரனுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசளித்து கவுரவித்தார். கலை இயக்குநர் தேவி வீரப்பன் இந்நிகழ்வின் நோக்கம், தமிழே வாழ்க எனும் நிகழ்வின் தொடக்கம், பயணம் குறித்து உரையாற்றி நிகழ்விற்கு முத்திரை பதித்தார்.
கே.வி.கோதா, அரசகுமாரி, ஷெரேன் ஜீவிதா, மஞ்சு ராஜேஷ் ஆகியோர் நடுவர்களாகப் பொறுப்பேற்றிருந்தனர். பாலர் பள்ளி மாணவர்கள் முதல் பிரிவிலும், தொடக்க நிலை 1 முதல் 4 வரை இரண்டாவது பிரிவிலும் தொடக்க நிலை 5 முதல் உயர்நிலை 4 வரை மூன்றாம் பிரிவிலும் கலந்து கொண்டனர்.. முதல், இரண்டாவது, மூன்றாவது பரிசுகள் ஒவ்வொரு பிரிவிற்கும் வழங்கப்பட்டது.
தாரணி மற்றும் மகிஷா ஆகியோர் நிகழ்வினைச் சுவைபட நெறிப்படுத்தி அனைவரின் பாராட்டினைப் பெற்றனர். தமிழ் விழாவை முத்தமிழ் விழாவாகப் பரிணமிக்கச் செய்த தேவி வீரப்பனின் சக்தி நுண்கலைக் கழக வரலாற்றில் இது மற்றொரு மைல் கல் என பார்வையாளர்கள் பாராட்டு மழை பொழிந்தனர்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement